நெல்லையில் பக்ரீத் சிறப்புத் தொழுகை

முஸ்லிம்களின் தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு அமைப்புகளின் சார்பில் மாவட்டம் முழுவதும் உள்ள ஈத்கா திடல்களில் செவ்வாய்க்கிழமை சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
Updated on
2 min read

முஸ்லிம்களின் தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு அமைப்புகளின் சார்பில் மாவட்டம் முழுவதும் உள்ள ஈத்கா திடல்களில் செவ்வாய்க்கிழமை சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில், பங்கேற்றோர் உலக மக்களின் நலனுக்காகவும், ஒற்றுமைக்கும், மழை வேண்டியும் இறைவனிடம் வேண்டிக்கொண்டனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மேலப்பாளையம் மாநகராட்சி மண்டல அலுவலகம் அருகேயுள்ள ஈத்கா திடலில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கலந்துகொண்டு தொழுகையில் ஈடுபட்டனர். அமைப்பின் மேலாண்மைக் குழுத் தலைவர் எம் ஷம்சுல்லுஹா ரஹ்மானி தொழுகையை நடத்தி வைத்துப் பேசியது:
இஸ்லாம் என்றாலே அமைதியும், தியாகமும்தான். மூடநம்பிக்கைகள், சாதி வேறுபாடுகள், பில்லி, சூனியம், சமூக கொடுமைகள், தீண்டாமைக்கு எதிராக இப்ராஹீம் நபி அரும்பாடுபட்டார். அவரது வழியில் உலகில் எங்கும் இத்தகைய தீமைகள் நடைபெறாமல் பாதுகாத்து சமூக நல்லிணக்கத்தைப் பேண வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாகும். அத்தகையை கடமையை நிறைவேற்ற தியாகத் திருநாளில் உறுதியேற்க வேண்டும். கல்வி, வேலைவாய்ப்புகளில் புறக்கணிப்படுவதாலேயே பலரும் தவறான பாதைக்குச் செல்கின்றனர். எனவே, விகிதாசார அடிப்படையில் முஸ்லிம்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் உரிய இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றார்.
மாநிலச் செயலர்கள் யூசூப் அலி, செய்யது அலி, மாவட்டத் தலைவர் சுபைர் அஹமது, மாவட்டச் செயலர் ரோஷன், பொருளாளர் முகைதீன் உள்ளிட்ட 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொழுகையில் கலந்துகொண்டனர். இதையடுத்து ஆடுகள், மாடுகள் வெட்டப்பட்டு ஏழைகளுக்கு குர்பானி வழங்கும் நிகழ்வாக இலவசமாக இறைச்சி விநியோகிக்கப்பட்டது.
மறுமலர்ச்சி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் ஏகத்துவப் பிரசாரப் பேரவை சார்பில், மேலப்பாளையம் அலங்கார் தியேட்டர் வளாக திடலில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. மௌலவி ஹாமீம், தொழுகையை நடத்திவைத்து குத்பா உரை நிகழ்த்தினார். மாநிலப் பொதுச் செயலர் ரசூல்மைதீன், மாவட்டப் பொருளாளர் ஆலியப்பா, துணைத் தலைர் அசன்மைதீன், வளைகுடா பொறுப்பாளர் முகமது மைதீன் மற்றும் ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர்கள் என நூற்றுக்கணக்கானோர் இந்தத் தொழுகையில் பங்கேற்றனர். பின்னர், கூட்டு குர்பானி மூலம் ஏழைகளுக்கு இறைச்சிகள் வழங்கப்பட்டன.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் இஸ்லாமிய பிரசாரப் பேரவை சார்பில், மேலப்பாளையம் அல்லாமா இக்பால் பஜார் திடலில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. தமுமுக மாநிலத் தலைவர் ஜே.எஸ். ரிபாயி ரஸாதி, தொழுகையை நடத்திவைத்து, பக்ரீத் பெருநாளின் தியாகத்தை விளக்கிப் பேசினார். இதில், மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
மஸ்ஜித்துல் ஹூதா ஜமாத் சார்பில், மேலப்பாளையம் கரீம் நகர் ஈத்கா திடலில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. பேரவையின் தலைவர் மௌலவி ஷாகுல் ஹமீது உஸ்மானி, தொழுகையை நடத்திவைத்து குத்பா உரையாற்றினார். நாட்டு மக்களிடையே ஒருமைப்பாட்டையும், சகோதரத்துவத்தையும் வளர்க்கவும் தியாகத் திருநாளில் உறுதியேற்கப்பட்டது.
ஹாமீம்புரம் சுன்னத்துல் ஜமாத் ஈத்கா திடலில், மஸ்ஜிதே ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகத்தின் சார்பில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பேட்டை கிளையின், மஸ்ஜிதுர் ரஹீம் பள்ளிவாசல் சார்பில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதேபோல, பாளையங்கோட்டை, சமாதானபுரம், பாளையங்கோட்டை மேட்டுத்திடல், பேட்டை, பாட்டப்பத்து, தச்சநல்லூர், புதிய பேருந்து நிலையம் என மாநகரப் பகுதியில் உள்ள அனைத்து பள்ளிவாசல்கள் சார்பில், அந்தந்தப் பகுதியில் உள்ள ஈத்கா திடலில் சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com