கழிவு மேலாண்மை முறையற்றிருப்பதால்தான் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது என கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
ஆழ்வார்குறிச்சி ஸ்ரீ பரமகல்யாணி கல்லூரியிலுள்ள மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக சுற்றுச்சூழல் அறிவியல் ஒப்புயர்வு மையத்தில் உலக சுற்றுச்சூழல் தின கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது.
இக்கருத்தரங்குக்கு சுற்றுச் சூழல் மையத் தலைவர் ஏ.ஜி. முருகேசன் தலைமை வகித்தார். ஹைதராபாத் பெரும் தொழில்நிறுவன சுற்றுச்சூழல் நலம் மற்றும் பாதுகாப்பு வல்லுநர் ஜே.கே.சாம்சன் சிறப்புரையாற்றினார்.
அப்போது, சுற்றுச்சூழலுக்கு மனிதர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்வேறு தீங்குகளை செய்கின்றனர். தண்ணீரை வீணாக்குதல், பிளாஸ்டிக் கழிவுகளை அதிகரித்தல், வாகனப் பயன்பாட்டு மூலம் காற்று மாசு ஏற்படுத்துதல், மரங்களை வெட்டுதல், தொழிற்சாலை கழிவுகள் போன்ற செயல்கள் சூழலுக்கு பெரும் தீங்கிழைப்பவையாகும். இந்நிலையை உடனடியாக மாற்றாவிட்டால் சுற்றுச்சூழல் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் என்றார்.
இணைப் பேராசிரியர் ஜி.அண்ணாதுரை வரவேற்றார். எஸ்.செந்தில் நாதன் சிறப்பு அறிமுக உரையாற்றினார். சுற்றுச் சூழல் மைய வளாகத்தில் மாணவர்கள் மரக்கன்றுகள் நட்டனர். துணைப் பேராசிரியர்கள் சொர்ணம், முரளிதரன், ஆராய்ச்சி மாணவர்கள் மாணவிகள், முதுநிலை ஆராய்ச்சியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.