திருநெல்வேலி அருகேயுள்ள நரசிங்கநல்லூரில் பழுதான சாலைகள், குடிநீர்த் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.
திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதியின் மானூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட நரசிங்கநல்லூர் ஊராட்சியில் 7 வார்டுகள் உள்ளன. ஜீவா நகர், நரசிங்கநல்லூர், மேலூர், தீன் நகர், விஸ்வநாத நகர், திருவள்ளுவர் நகர், இந்திரா காலனி உள்ளிட்ட பகுதிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழைமை வாய்ந்த குலசேகரமுடையார் திருக்கோயில் இந்த ஊரில் உள்ளது. இங்கு பிரதோஷம், சிவராத்திரி காலங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கிறார்கள்.
குடிநீர்த் தட்டுப்பாடு: திருநெல்வேலி மாநகராட்சியின் மிகவும் அருகில் உள்ள ஊராட்சி என்பதால், நகர் பகுதியில் பணியாற்றும் பலரும் இங்கு குடியிருப்புகளை வாங்கி வருவதால் மக்கள்தொகை வேகமாக அதிகரித்து வருகிறது. ஆனால், அதற்கேற்ப அடிப்படை வசதிகள் போதுமான அளவில் இல்லை. அரசு தொடக்கப் பள்ளி, அரசு உயர்நிலைப் பள்ளி ஆகியவை செயல்பட்டு வந்தாலும் அங்கு போதிய வகுப்பறைகள், மைதானம், கல்விசார் உபகரணங்கள் இல்லாமல் உள்ளன. ஊராட்சி ஒன்றிய பராமரிப்பின் கீழ் 35 சாலைகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை குண்டும் குழியுமாக உள்ளன.
இந்திரா காலனி சாலை, செல்வி அம்மன் கோயில்-மேலூர் இணைப்புச் சாலை, இந்திரா நகர், ரோஜாப்பூ காலனி உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் சேதமடைந்த நிலையில் உள்ளன. தீன் நகர், திருவள்ளுவர் நகர் பகுதிகளில் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவி வருகிறது. 7 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், 15 சிறுமின்விசைக் குழாய்கள் மூலம் பொதுமக்களுக்கு தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. இவை போதுமானதாக இல்லை. தாமிரவருணி நதியின் அருகில் வசித்து வந்தாலும் நரசிங்கநல்லூர் ஊராட்சியின் பல இடங்களில் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.
பேருந்து வசதி: இதுகுறித்து நரசிங்கநல்லூரைச் சேர்ந்த எஸ்.வேல்முருகன் கூறியது: நரசிங்கநல்லூர் பகுதி மாணவர்கள் மேல்நிலை, கல்லூரிக் கல்விக்காக பேட்டை, திருநெல்வேலி நகரம், பாளையங்கோட்டை பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. அவர்களுக்கு போதிய பேருந்து வசதியில்லை. காலையில் 7.15 மணிக்கு மட்டுமே அரசுப் பேருந்து இயக்கப்படுவதால் மாணவர்களுக்கு பயனற்ற நிலையில் உள்ளது. இதேபோல இரவு நேர பேருந்துகள் முறையாக இயக்கப்படாததால் மாநகர பகுதிகளில் பணியாற்றும் தொழிலாளர்களும், வெளியூர் சென்று வருவோரும் அதிக கட்டணம் செலுத்தி ஆட்டோக்களில் வரும் நிலை தொடர்கிறது.
நரசிங்கநல்லூரில் உள்ள ரேஷன் கடை மழைக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் ஒழுகியதால் தாற்காலிக கட்டடத்திற்கு மாற்றப்பட்டு பல மாதங்களாகிவிட்ட பின்பும் பழைய கட்டடம் சீரமைக்கப்படாமல் உள்ளது. கோடகன்கால்வாயின் கீழ் உள்ள தட்டக்குளத்தின் மூலம் 100-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இதேபோல நிலவரியான் குளத்தின் மூலம் நிலத்தடி நீர்மட்டம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. வறட்சியின் பிடியில் சிக்கியுள்ள இரு குளங்களையும் தூர்வாரக் கோரி அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித பலனுமில்லை. தெருவிளக்கும், வாருகால் வசதியில்லாததால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள், முதியவர்கள், பெண்கள் அச்சத்திற்கு ஆளாகி வருகிறார்கள். ஆகவே, நரசிங்கநல்லூர் ஊராட்சியில் குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.