பாழடைந்த நிலையில் ஆலங்குளம் விளையாட்டு மைதானம்!

ஆலங்குளத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 22.5 லட்சம் செலவில் கட்டப்பட்ட  விளையாட்டு மைதானம் புதர்கள் மண்டி பயனற்றுக் கிடக்கிறது.

ஆலங்குளத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 22.5 லட்சம் செலவில் கட்டப்பட்ட  விளையாட்டு மைதானம் புதர்கள் மண்டி பயனற்றுக் கிடக்கிறது. இதை புனரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என விளையாட்டு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
ஆலங்குளம் பகுதியில் ஏராளமான பள்ளிகள், கல்லூரிகள் உள்ளன. இவற்றில் ஆயிரக்கணக்கான மாணவ- மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். கல்லூரி, பள்ளிகள் தவிர இப்பகுதியில் பொதுமக்கள் விளையாடவோ, பொழுதுபோக்கு அம்சங்களோ இல்லை.
விளையாட்டுத் துறையில் மாணவர்கள் திறனை மேம்படுத்தும் பொருட்டு மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்தும் வகையில், மைதானம் அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துவந்தனர். 
அதையேற்று,  கடந்த 2009இல்  அப்போதைய அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணாவின் முயற்சியுடன் ஆலங்குளத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள சிவலார்குளம் கிராமத்தில் 10. 50 ஏக்கர் பரப்பளவில் விளையாட்டு மைதானம் அமைக்க அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
 பின்னர் ரூ.22.5 லட்சம் செலவில் இந்த இடத்தில் தகுந்த பாதை, பார்வையாளர்கள் அமர்ந்து விளையாட்டை கண்டு களிக்க பார்வையாளர் மாடம்,  சுகாதார வளாகம் ஆகியவை கட்டி முடிக்கப்பட்டு 14.10.2009-இல் அப்போதைய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வெள்ளக்கோயில் சாமிநாதன் திறந்து வைத்தார்.
அடிப்படை வசதிகள் இல்லை: தொடர்ந்து இரு ஆண்டுகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மாதம் ஒரு முறையாவது விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. உள்ளூர் இளைஞர்களும் விளையாட்டு மைதானத்தில் நடைப்பயிற்சி மற்றும் விளையாட்டுப் பயிற்சிகள் மேற்கொண்டனர். ஓரிரு ஆண்டுகளுக்குப் பிறகு இங்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுவது நின்றுபோனது. 
ஆலங்குளத்தில் இருந்து சற்று தொலைவில் இருப்பதால், குடியிருப்புகளோ, வணிக வளாகங்களோ, விளையாட்டு வீரர்கள் ஓய்வு எடுப்பதற்கு நிழற்குடையோ இல்லை என்பது போன்ற காரணங்களால் மைதானத்துக்கு வருவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டதாக கூறுகின்றனர் இளைஞர்கள். தற்போது மைதானத்திலுள்ள விளையாட்டு உபகரணங்கள் துருப்பிடித்தும், மைதானம் முழுவதும் புதர்கள் மண்டியும்  காட்சியளிக்கின்றன.
நெடுஞ்சாலை முதல் மைதானம் வரை நடப்பட்ட மரக்கன்றுகளும் பட்டுப்போகும் நிலையில் உள்ளன. பாதையில் கற்கள் முழுவதும் பெயர்ந்து போக்குவரத்திற்கு தகுதியற்றதாகி விட்டது. எனவே, மைதானத்தை உடனடியாக சீரமைத்து, ஆண்கள், பெண்களுக்கு தனித்தனிப் பயிற்சியாளர்களை நியமிக்க வேண்டும். 
குற்றுயிராக கிடக்கும் மரக்கன்றுகளுக்கு போதிய குழாய்கள் அமைத்து தண்ணீர் விட்டு வளர்க்க வேண்டும். விளையாட்டு வீரர்கள் ஓய்வெடுக்க நிழற்குடை, தங்கும் அறை போன்றவை அமைத்து சுற்றுச் சுவர் எழுப்பி முறையாக பராமரித்தால் ஆலங்குளம் பகுதி இளைஞர்கள் விளையாட்டில் மேலும் சிறந்து விளங்குவார்கள் என்பது இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பு.
விரைவில் சீரமைப்பு: இது குறித்து திருநெல்வேலி மாவட்ட விளையாட்டு அலுவலர் வீரபத்ரனிடம் கேட்ட போது, "தற்போது மேலப்பாளையம் விளையாட்டு மைதானம் சீரமைக்கப்பட்டு வருகிறது. விரைவில் ஆலங்குளம் விளையாட்டு மைதானம் சீரமைக்கப்பட்டு மாவட்ட அளவிலான போட்டிகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com