சங்கரன்கோவிலில் விசைத்தறித் தொழிலாளர்கள் போராட்டம் 32 நாள்களைத் தாண்டியுள்ளதால் அவர்களுடைய குடும்பங்கள் பொருளாதார நெருக்கடியால் தவித்து வருகின்றன.
சங்கரன்கோவிலில் விசைத்தறி கூடங்கள் மற்றும் வீடுகளில் 2 தறி, 4 தறி என மொத்தம் 5000-க்கும் மேற்பட்ட விசைத்தறிகள் உள்ளன. தறிநெய்தல், நூலுக்குப் பசைபோடுதல், சாயம் ஏற்றுதல், பாவு போடுதல், கண்டுபோடுதல் உள்ளிட்ட விசைத்தறித் தொடர்பான தொழிலில் மட்டும் சுமார் 10 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் காட்டன் சேலைகள் தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது.
விசைத்தறிக் கூடங்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. 2 தறி, 4 தறி என வீடுகளில் போட்டு தொழில் செய்யும் சிறு விசைத்தறியாளர்கள் தற்போது பெருகிவருகின்றனர். இதற்கு முன்பு விசைத்தறி தொழிலாளர்களுக்கு மட்டுமே ஊதிய உயர்வும், தேசிய விடுப்பு ஊதியமும் வழங்கப்பட்டு வந்தது. தற்போது சிறு விசைத்தறியாளர்கள் பெரிய விசைத்தறிக் கூடங்களில் பாவு வாங்கி சேலை நெய்து கொடுத்து வருவதால், அவர்களிடம் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கும் ஊதிய உயர்வு கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. விசைத்தறி உரிமையாளர்கள் ஊதிய உயர்வு வழங்கும்போது, சிறு விசைத்தறியாளர்களுக்கும் வழங்க வேண்டியநிலை ஏற்பட்டது. இதனால் கடந்த ஆண்டு தொழிலாளர்களுடன் இணைந்து சிறுவிசைத்தறியாளர்களும் ஊதிய உயர்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்காரணமாக விசைத்தறித் தொழிலாளர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு ஒப்பந்தம் போடப்பட்டு, அதில் சிறுவிசைத்தறியாளர்களும் சேர்க்கப்பட்டனர். அதன்படி கடந்த 2016 ஆம் ஆண்டு கூலி உயர்வு ஒப்பந்தத்தில் தொழிலாளர்களுக்கு 21 சதவீதமும், சிறு விசைத்தறியாளர்களுக்கு 19 சதவீதமும் கூலி உயர்வு வழங்கப்பட்டது. இதுதவிர தேசிய விடுப்பு ஊதியம் ரூ.180 வழங்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதியோடு முடிவடைந்தது.
இதையடுத்து நிகழாண்டில் விசைத்தறித் தொழிலாளர்கள் 60 சதவீத ஊதிய உயர்வு மற்றும் தேசிய விடுப்பு ஊதியம் ரூ.300 வழங்ககோரி கடந்த 30ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து ஆர்ப்பாட்டம், சாலை மறியல், பேரணி, மனுக்கொடுக்கும் போராட்டம் போன்ற பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே கூலி உயர்வு குறித்து தொழிற்சங்கத்தினருக்கும், விசைத்தறி உரிமையாளர்களுக்கும் இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. சங்கரன்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த 2 கட்டப் பேச்சுவார்த்தை,திருநெல்வேலி தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற 6 கட்டப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. தொடர் வேலை நிறுத்தம் காரணமாக ரூ.12.80 கோடி மதிப்பிலான துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக சுமார் ரூ.4.80 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
மாற்றுத் தொழிலும், வறுமையும்...: வேலை நிறுத்தம் காரணமாக தொழிலாளர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். வாரம் ஒருமுறை ஊதியம் பெற்று அதில் வாழ்க்கையை நடத்தி வந்த தொழிலாளர்கள் கடந்த 32 நாள்களாக வேலை இல்லாததால் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்கள் மாற்றுத் தொழிலுக்குத் திரும்ப வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். சிலர் திருமண விழா மற்றும் ஹோட்டல்களில் உணவு பரிமாறும் வேலையை செய்து வருகின்றனர்.
இது தொடர்பாக விசைத்தறித் தொழிலாளி தங்கவேலு கூறுகையில், "வேலை இல்லாததால் வருமானம் இல்லை. வாங்கிய கடனை செலுத்த முடியவில்லை. வீட்டு வாடகை, சாப்பாட்டு செலவுக்காக மேலும் கடன் வாங்கியிருக்கிறோம். பேச்சுவார்த்தையில் உடனடியாக உடன்பாடு ஏற்பட்டால்தான் எங்களால் சமாளிக்க முடியும். இல்லையெனில் எங்கள் நிலைமை மோசமாகிவிடும்' என்றார்.
பெண் தொழிலாளியான சுப்புலட்சுமி கூறுகையில், "பள்ளிக்கூடம் திறக்கும் நிலையில், பிள்ளைகளை பள்ளியில் சேர்க்க பணம் தேவை. யாரிடம் போய் கையேந்தி நிற்க முடியும்? ஊதியப் பிரச்னைக்கு தீர்வு கண்டால்தான் குழந்தைகளைப் படிக்க வைக்க முடியும். அதிகாரிகள் உடனே தலையிட்டு பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டுவதற்கு தீர்வு காண வேண்டும்' என்றார்.
வேலை நிறுத்தம் காரணமாக நகரின் பொருளாதாரம் ஸ்தம்பித்துள்ளதோடு, தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளதால், ஊதிய உயர்வுப் பிரச்னைக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்பதே அனைவருடைய எதிர்பார்ப்பாக உள்ளது.
மீண்டும் 5 ஆம் தேதி பேச்சுவார்த்தை: இதற்கிடையே பாளையங்கோட்டையில் தொழிலாளர் நல அலுவலகத்தில் 9 ஆவது கட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தொழிலாளர் துணை ஆணையர் ஹேமலதா, உதவி ஆணையர் அப்துல்காதர்சுபேர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இப்பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டாத நிலையில் செவ்வாய் க்கிழமை (ஜூன் 5) மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.