நீட் தேர்வில் வெற்றி பெற்ற துப்புரவு தொழிலாளியின் மகனுக்கு பாராட்டு
By DIN | Published On : 15th July 2018 05:49 AM | Last Updated : 15th July 2018 05:49 AM | அ+அ அ- |

நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ள துப்புரவு தொழிலாளியின் மகனுக்கு திருநெல்வேலி மாநகராட்சி சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
திருநெல்வேலியை அடுத்த பழையபேட்டையைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவர், திருநெல்வேலி மாநகராட்சியில் பழையபேட்டை பகுதியில் துப்புரவு தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார். இவருடைய மகன் சுதாகர். இவர், நீட் தேர்வில் வெற்றி பெற்று திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளார்.
இதையடுத்து மாநகராட்சி ஆணையர் வி.நாராயணன் நாயர், சுதாகரைப் பாராட்டி கேடயம் வழங்கி, சால்வை அணிவித்தார். மேலும் அவருக்கு ஊக்கப் பரிசாக ரூ.5 ஆயிரத்துக்கான காசோலை வழங்கப்பட்டது. மாநகராட்சி பொது சுகாதார பிரிவு ஊழியர்கள் சார்பில் சுதாகரின் கல்விக்கு உதவிடும் வகையில் ஓராண்டிற்கு தேவையான 5 செட் உடைகள் பரிசாக அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாநகர நகர் நல அலுவலர் (பொறுப்பு) பிர்தெளசி, சுகாதார அலுவலர் அரசகுமார், முருகேசன், சாகுல் ஹமீது, சுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர்கள் முருகன், இளங்கோ, நடராசன், சங்கரநாராயணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...