ஆலங்குளம் கால்வாய் தூர்வாரப்படாததால் வீணாகும் குற்றால அருவி நீர்- விவசாயிகள் கவலை

பல ஆண்டுகளாக கோரிக்கையில் இருக்கும் ஆலங்குளம் கால்வாய் சீரமைப்பு விரைவில் நிறைவேற வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பல ஆண்டுகளாக கோரிக்கையில் இருக்கும் ஆலங்குளம் கால்வாய் சீரமைப்பு விரைவில் நிறைவேற வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முக்கிய நதிகளில் ஒன்று சிற்றாறு. மேற்குத் தொடர்ச்சி மலை அருவிகளின் தண்ணீரை மையமாகக் கொண்டு பாயும் சிற்றாறில் 17 அணைக்கட்டுக்கள் உள்ளன. இதில் 3 வது தடுப்பணை பாவூர்சத்திரம் அருகேயுள்ள மேலப்பாவூருக்கு மேற்கே உள்ளது. இந்த அணையிலிருந்து மேலப்பாவூர் குளத்திற்கும் கீழப்பாவூர் பெரிய குளத்திற்கும் தண்ணீர் வருகிறது. இந்த இரண்டு குளங்களும் நிரம்பிய பின்பு மறுகால் வழியாக நாகல்குளம், கடம்பன்குளம் ஆகிய குளங்களுக்குத் தண்ணீர் வருகிறது. 
பராமரிப்பு குறைவு: கடம்பன்குளத்துக்குத்  தண்ணீர் செல்லும் பாதையில் இருந்து ஆலங்குளம் தொட்டியான் குளத்துக்கு சிற்றாற்று தண்ணீரை கொண்டு செல்லும் பொருட்டு காமராஜர் ஆட்சி காலத்தில் 1962 ஆம் ஆண்டில் கால்வாய் வெட்டப்பட்டது. பெரிய நீர் நிலைகள், ஆறுகள் ஏதும் இல்லாமல் உள்ளூரில் பொழியும் மழையை மட்டுமே நம்பி இருந்த வறட்சிப் பகுதியான ஆலங்குளம் மக்கள் இது குறித்து அப்போது பெரிதும் மகிழ்ந்தனராம். 
எனினும், கால்வாய் வெட்டப்பட்டு பல ஆண்டுகளாக தொட்டியான்குளத்துக்கு தண்ணீர் வராத நிலையில்,  கால்வாய் போதிய பராமரிப்பு இன்றி பெரும்பாலான பகுதி மணல் மேடாகவும் முள் புதர்களாகவும் மாறிப்போனது.  ஒரு வழியாக 1989 ஆம் ஆண்டில் கால்வாய் வழியாக தொட்டியான் குளத்துக்கு தண்ணீர் வந்தது. கால்வாய் நீர் தொட்டியான் குளம் செல்லும் பாதையில் பூலாங்குளம், சின்ன பூலாங்குளம், கோவிலூற்று குளம் மற்றும் ஆண்டிபட்டி குளங்கள் பாசன வசதி பெறுகின்றன. அதன் பின்னர்  7 ஆண்டுகளாக கடம்பன்குளம் வரை தண்ணீர் வந்தாலும் கால்வாயில் தண்ணீர் வராததால் ஆலங்குளம் பகுதி விவசாயிகள் கவலையடைந்தனர். 
தன்னார்வப் பணி: கால்வாயை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தாலும் பொதுப் பணித்துறை சார்பில் எவ்வித நடவடிக்கையும் இல்லை என கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், தண்ணீர் கொண்டு செல்வதற்காக டி.ஆர்.டி. ராஜன் தலைமையில் தன்னார்வலர்கள் இணைந்து  மக்களிடம் நிதி வசூலித்து கால்வாயை ஓரளவு சீரமைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.  இதன் பயனாக கடந்த 1996, 2006  ஆண்டுகளில் கால்வாயில் தண்ணீர் வந்தது.
2014 , 2015 ஆம் ஆண்டுகளிலும் கால்வாய் மூலம் தண்ணீர் தொட்டியான்குளத்தை வந்தடைந்தது. அதன்பிறகு கால்வாய்  பராமரிப்பின்றி மண்மேடானது.
இந்நிலையில்தான் கடந்த ஆண்டு இக்கால்வாயை, பொதுப்பணித்துறை சீரமைக்க கோரி சாலை மறியல் என அறிவித்ததன் விளைவாக பொதுப்பணி, வருவாய் மற்றும் காவல்துறையினர் தன்னார்வலர்களுடன் இணைந்து சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஓரிரு நாளே பொக்லைன் போன்றவற்றிற்கு பொதுப்பணித்துறை சார்பில் வாடகை கொடுத்து வந்த நிலையில் சீரமைப்புப் பணியை நிறுத்திக் கொண்டது. கடந்த ஆண்டு தென் மேற்குப் பருவமழை ஓரளவு நன்கு பெய்த நிலையில் தன்னார்வலர்கள் 20 க்கும் மேற்பட்டோர் பொதுமக்களிடமிருந்து நிதி வசூல் செய்து சுமார் 12 கி.மீ. தொலைவுள்ள கால்வாயின் மேடான பகுதிகளை அகற்றி கால்வாயில் நீர் வரச் செய்தனர். இதையடுத்து வழியோர குளங்கள் மற்றும் தொட்டியான்குளம் நிரம்பி, விவசாயம் செழிப்படைந்தது.
ரூ.6 கோடி ஒதுக்கீடு: கால்வாய் கரைகளைப் பலப் படுத்துவதுடன், மேடான பகுதிகளை தணித்து கான்கிரீட் மூலம் நிரந்தரமாக செம்மைப் படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்த போது, கால்வாயை சீரமைக்க ரூ. 6 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும் அந்தத் தொகை ஒதுக்கீடு தொடர்பாக அரசிடமிருந்து எந்த அறிவிப்பும் இது வரை வரவில்லை என்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். 
இது தொடர்பாக கால்வாய் சீரமைப்பு தன்னார்வலர் ஜார்ஜ் தங்கம் கூறியது: கடம்பன்குளம் தண்ணீர் பாதையில் இருந்துதான் ஆலங்குளத்துக்கு கால்வாய் வெட்டி தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது. கால்வாய் அமைக்கப் பட்டது முதல் இதுவரை இந்த கால்வாய் தூர்வாரப்படவில்லை. மராமத்து பணிகளுக்கு கடந்த ஆண்டு பல லட்சம் ஒதுக்கியும் பணிகள் சரி வர நடைபெறவில்லை. கால்வாய் சீரமைப்பில் அதிகாரிகள் மெத்தனம் காட்டாமல் துரித நடவடிக்கை எடுத்து வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக நிதியைப் பெற முயற்சிக்க வேண்டும் என்றார்.
ஆக்கிரமிப்பு அதிகரிப்பு: மேலும் சில விவசாயிகள் கூறும்போது, "கால்வாயில் ஆக்கிரமிப்புகள் பெருகிவிட்டன. ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன் சீசன் காலங்களில் குற்றால அருவி தண்ணீரை முறையாக விநியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டால் கால்வாயில் தண்ணீர் வருவது என்பது ஆண்டுதோறும் போராட்டமாக  இருக்காது என்றனர்.
மறு அறிக்கை தாக்கல்: இது தொடர்பாக ஆலங்குளம் பொதுப்பணித்துறைப் பொறியாளர் அப்துல் ரஹ்மானிடம் கேட்ட போது, "கால்வாய் பராமரிப்பிற்காக கடந்த ஆண்டு  ரூ. 6 கோடி ஒதுக்கீடு செய்ய கோரிய நிலையில், தற்போதைய விலைவாசி உயர்வு போன்ற காரணங்களால், அந்தத் தொகையை ரூ. 9 கோடியாக உயர்த்தி  நிகழாண்டு மறு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரசின் உத்தரவுக்காக காத்திருக்கிறோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com