மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச உபகரணங்கள்: நெல்லை மாவட்டத்தில் 5 இடங்களில் சிறப்பு முகாம்

திருநெல்வேலி மாவட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு இலவசமாக உதவி உபகரணங்கள் வழங்குவதற்காக 5 இடங்களில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு இலவசமாக உதவி உபகரணங்கள் வழங்குவதற்காக 5 இடங்களில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவசமாக உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் திருநெல்வேலி மாவட்டத்தில் ஏற்கெனவே அடையாள அட்டை பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மடக்கு சக்கர நாற்காலி, மூன்று சக்கர சைக்கிள், காதொலிக் கருவி, ஊன்றுகோல், ரோலேட்டர், ஒளிரும் மடக்கு குச்சி, தொழுநோயாளிகளுக்கான சிறப்பு செல்லிடப்பேசி, பட்டப் படிப்பு பயிலும் பார்வையற்ற மாணவர்களுக்கு சிறப்பு செல்லிடப்பேசி (மற்றும்) பிரெய்லி கேன், மன வளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு மருத்துவ உபகரணங்கள், செயற்கை அவயங்கள், காலிப்பர்கள் போன்ற உபகரணங்கள் வழங்கிடும் பொருட்டு 5 வட்டங்களில் இந்த முகாம் நடைபெறுகிறது. எனவே,  உதவி உபகரணங்கள் தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
வள்ளியூர் கன்கார்டியா மேல்நிலைப் பள்ளியில் செப்டம்பர் 3ஆம் தேதி காலை 10 ஆம் தேதி மாலை 4 மணி வரைநடைபெறும் சிறப்பு முகாமில் ராதாபுரம், வள்ளியூர், நான்குனேரி, களக்காடு வட்டாரங்களைச் சேர்ந்த மக்கள் கலந்துகொள்ளலாம். சங்கரன்கோவில் கோமதியம்மாள் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் செப்டம்பர் 4ஆம் தேதி நடைபெறும் முகாமில் வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், குருவிகுளம், மேலநீலிதநல்லூர் வட்டாரங்களைச் சேர்ந்த மக்கள் கலந்துகொள்ளலாம்.
தென்காசி ஈஸ்வரன் அரசு மேல்நிலைப் பள்ளியில் செப்டம்பர் 5ஆம் தேதி நடைபெறும் சிறப்பு முகாமில் செங்கோட்டை, கடையநல்லூர், கீழப்பாவூர்,  ஆலங்குளம், தென்காசி வட்டாரங்களைச் சேர்ந்த மக்கள் கலந்துகொள்ளலாம். அம்பாசமுத்திரம் ராணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் செப்டம்பர் 6ஆம் தேதி நடைபெறும் முகாமில் கடையம், பாப்பாக்குடி, அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி வட்டாரங்களைச் சேர்ந்த மக்கள் கலந்துகொள்ளலாம்.
பாளையங்கோட்டை பிளாரன்ஸ் சுவைன்சன் காது கேளாதோருக்கான மேல்நிலைப் பள்ளியில் செப்டம்பர் 7ஆம் தேதி நடைபெறும் முகாமில்  மானூர், பாளையங்கோட்டை, திருநெல்வேலி  மாநகராட்சி வட்டார மக்கள் கலந்துகொள்ளலாம்.
முகாமுக்கு வரும்போது, மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டை,  வருமானச் சான்று (ஆண்டு வருமானம் ரூ.72000-க்குள் இருத்தல் வேண்டும்), பட்டம் பயிலும் பார்வையற்ற மாணவர்கள் கல்விச் சான்று ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களுடன், இரண்டு புகைப்படங்களையும் கொண்டு வர வேண்டும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com