மனிதரால் மனிதர்களுக்காக எழுதப்பட்ட பொக்கிஷம் திருக்குறள்

மனிதரால் மனிதர்களுக்காக எழுதப்பட்ட பொக்கிஷம் திருக்குறள் என்றார் இந்திய கடவுச்சீட்டு மற்றும் விசா ஒருங்கிணைப்பு இயக்குநர் ஆ.நடராசன்.
Updated on
2 min read


மனிதரால் மனிதர்களுக்காக எழுதப்பட்ட பொக்கிஷம் திருக்குறள் என்றார் இந்திய கடவுச்சீட்டு மற்றும் விசா ஒருங்கிணைப்பு இயக்குநர் ஆ.நடராசன்.
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் நிறுவப்பட்டுள்ள திருக்குறள் சொற்பொழிவுகள் அறக்கட்டளை சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டியாருக்கு முத்தமிழ் வள்ளல் பட்டமும், வி.ஜி.சந்தோசத்திற்கு திருக்குறள் நெறிச்செம்மல் பட்டமும், சேயோனுக்கு திருக்குறள் நெறிச்சுடர் பட்டமும் வழங்கப்பட்டன. இந்த விழாவில் ஆ.நடராசன் பேசியது:
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த நான், இந்திய அயலக அமைச்சுப் பணியின் கீழ் பல்வேறு நாடுகளில் பணியாற்றியுள்ளேன். ஆங்கிலம் உள்பட சில நாடுகளின் மொழிகளை அறிந்திருக்கிறேன். ஆனாலும், எனது தாய்மொழியான தமிழ் எனக்கு மிகவும் பிடித்த மொழியாகும்.
மலேசியா, இலங்கை, சிங்கப்பூர் பகுதிகளில் வசிக்கும் தமிழர்களிடம் திருநெல்வேலி என்று சொன்னாலே அல்வாவை நினைவுகூருகிறார்கள். விடுதலைப் போராட்ட உணர்வு இந்தியா முழுவதும் உருவாக காரணமாக இருந்த வீரபாண்டிய கட்டபொம்மன், மகாகவி பாரதியார், வ.உ.சிதம்பரனார் பிறந்த மாவட்டமும் திருநெல்வேலி என்று கூறி பெருமையடைவேன்.
வளர்ந்த மொழியான தமிழுக்கு சான்றோர்கள் பரிசாகவும், உதவியாகவும் இருந்து வருவதால் தமிழ் உயிரூட்டப்பட்டுக் கொண்டே வருகிறது.
விவிலியம், பகவத் கீதை, திருக்குர்ஆன் ஆகியவை இறைவனால் மனிதனுக்கு அருளப்பட்ட நூல்கள். திருவாசகம் போன்றவை மனிதர்களால் இறைவனைப் போற்றி படைக்கப்பட்ட நூல்கள். மனிதர்களுக்காக மனிதரால் எழுதப்பட்ட ஒரு பொக்கிஷம் திருக்குறள். தமிழ் மொழியில் உருவான அந்த சிந்தனைமிகு நூல், இப்போது 83 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் அலுவல் மொழிகளான ஆங்கிலம், சீனம், பிரெஞ்சு, அரேபியன் உள்பட 6 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு நியூயார்க்கில் வைக்கப்பட்டிருப்பது தமிழர்களுக்கு பெருமையளிப்பதாகும்.
அயல்நாடுகளில் திருவள்ளுவர் சிலைகளை நிறுவுவதன் மூலம் திருக்குறள் மட்டுமன்றி தமிழ் மொழியும் அயல்நாட்டு வாழ் தமிழ்க் குழந்தைகளிடம் வளரும். வெளிநாடுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்போது அதனைப் படைத்த மனோன்மணீயம் சுந்தரனாரின் பெருமை வெளிப்படும் என்றார் அவர்.
பல்கலைக்கழகத் துணைவேந்தர் கி.பாஸ்கர் பேசியது: திருக்குறளும் திருவள்ளுவரும் தமிழுக்கும் தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கும் விஷயங்களாகும். திருவள்ளுவரைப் போற்றும் வகையில் இப் பல்கலைக்கழக வளாகத்தில் சிலை நிறுவப்பட்டுள்ளது. உலகளவில் அதிக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட தமிழ் நூலாக திருக்குறள் உள்ளது. கடந்த காலம், நிகழ்காலம், வருங்காலத்திற்கு ஏற்ற வகையில் சிந்தனைமிகு கருத்துகள் இடம்பெற்றிருப்பது வியக்கவைக்கிறது. உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்ற உயரிய கருத்தை வள்ளுவம் போதிக்கிறது. மாணவர்கள் உயர்வான சிந்தனைகளை மனதில் நிறுத்த வேண்டும். தோல்விகளைக் கண்டு அஞ்சாமல் பீடு நடை போட வேண்டும் என்றார் அவர்.
விழாவில் பல்கலைக்கழக பதிவாளர் சே.சந்தோஷ்பாபு வரவேற்றார். தமிழியல் துறைத் தலைவர் அ.ராமசாமி சிறப்பு பட்டங்களை வாசித்தார். பொதிகைத் தமிழ்ச்சங்கத் தலைவர் பே.ராஜேந்திரன், பேராசிரியர் ஞா.ஸ்டீபன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

திருக்குறள் வாசிப்பு சிந்தனையைத் தூண்டும் தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டியார்:

பல்வேறு அமைப்புகள் சார்பில் பெற்ற விருது மற்றும் பட்டங்களைக் காட்டிலும் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் வழங்கிய பட்டத்தைப் பெருமையாகக் கருதுகிறேன். மாணவப் பருவத்திலேயே திருக்குறள் மீது எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. அதன்பின்பு மு.வரதராசனார் எழுதிய திருக்குறள் உரை நூலை நன்கு வாசித்தேன். இப்போது எல்லா நேரத்திலும் திருக்குறள் நூலுடன்தான் பயணித்து வருகிறேன். 
தமிழ் நூல்களிலேயே 416 பதிப்புகள் கண்டது மு.வ. திருக்குறள் தெளிவுரை நூலாகத்தான் இருக்க முடியும். வள்ளுவர் வகுத்த வாணிபம் என்ற எனது நூலில் 72 திருக்குறள்களின் கருத்துகளை தெளிவுபடக் கூறியுள்ளேன்.
திருக்குறளுக்கு பல்வேறு மொழிகளில் விளக்கவுரைகள் எழுதப்பட்டுள்ளன. இருப்பினும் குறளின் மூலத்தை அப்படியே வேறு மொழிகளில் பெயர்ப்பது மிகவும் சிரமம். மொழி பெயர்க்க முடியாத தன்மையைக் கொண்டிருப்பதே ஒரு மூல நூலின் தனிச்சிறப்பு. அதனை திருக்குறள் கொண்டுள்ளது. மாணவர் சமுதாயம் வாழ்வியல் நூலான திருக்குறளைப் படித்து சிறப்புற வேண்டும் என்றார்.
வி.ஜி.சந்தோசம்: முடியும் என்று சிந்தித்தால் மனிதர்கள் எந்தவொரு காரியத்தையும் செய்து முடிக்க முடியும். தமிழ் மட்டுமே படித்தால் வேலை கிடைக்காது என்ற மனநிலை இளையதலைமுறையிடம் உருவாகியுள்ள சூழலில், சிந்தனை வளத்தைப் பெருக்கிக் கொள்ள தாய்மொழிக் கல்வி அவசியம் என்ற விழிப்புணர்வு உருவாக வேண்டும். 
நீர், நில வளம் மட்டுமன்றி உலகின் பிற நாடுகளில் இல்லாத மனித வளம் அதிகமிருக்கும் நாடாக இந்தியா உள்ளது. நாட்டிற்காக உழைத்து வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். திருக்குறளை வாசித்தால் நல்ல சிந்தனை தூண்டப்பட்டு உழைப்பு அதிகரிக்கும். கல்வியை ஆயுதமாக்கிக் கொள்ள வேண்டும். திருவள்ளுவர் காட்டிய வழியில் நடப்பதாலும், பெற்றோரை மதிக்கும் பண்பை வளர்த்துக் கொண்டதாலும் விருது பெரும் நிலையை அடைந்துள்ளோம் என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com