காசிக்கு நிகரான கரிவலம்வந்தநல்லூரில் 35 ஆண்டுகளாக மூடிக் கிடக்கும் ரயில் நிலையம்: தீர்வு எப்போது? 

திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே 35 ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் கரிவலம்வந்தநல்லூர் ரயில்
Published on
Updated on
2 min read

திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே 35 ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் கரிவலம்வந்தநல்லூர் ரயில் நிலையத்தை மீண்டும் திறக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.
சங்கரன்கோவில் அருகே சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது கரிவலம்வந்தநல்லூர். சங்கரநாராயணசுவாமி கோயிலின் துணைக் கோயில்களில் ஒன்றான பால்வண்ணநாத சுவாமி கோயில் உள்ள இந்த ஊர் காசிக்கு நிகரான புண்ணிய ஸ்தலமாக கருதப்படுகிறது. இதனாலேயே மகாத்மா காந்தியின் அஸ்தி இங்குள்ள நிட்சேப நதியில் கரைக்கப்பட்டது.
அத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க கரிலவம்வந்தநல்லூரில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ள சென்னிகுளத்தில் ரயில் நிலையம் இருந்தது. அதாவது, ராஜபாளையத்திற்கும்- சங்கரன்கோவிலுக்கும் இடையே கரிவலம்வந்தநல்லூர் ரயில் நிலையம் இருந்தது. அப்போது மீட்டர் கேஜ் ரயில் பாதை இருந்ததால், மதுரையில் இருந்து புறப்படும் பயணிகள் ரயில் கரிவலம்வந்தநல்லூரில் நின்று செல்லும்.
இங்கு ரயில் நின்று செல்வதற்கு ஒரு பாதை, சரக்கு ரயில்கள் நிறுத்துவதற்கு ஒரு பாதை, விரைவு ரயில் செல்வதற்கு ஒரு பாதை என 3 பாதைகள் இருந்தன. இந்த ரயில் நிலையத்தை கரிவலம்வந்தநல்லூர், சுப்புலாபுரம், பனையூர், சங்குபுரம், குவளைக்கண்ணி, பருவக்குடி, ரெட்டியபட்டி, கலிங்கப்பட்டி, பாறைப்பட்டி, விஜயரெங்கபுரம், ஒத்தக்கடை, லெட்சுமியாபுரம், சுப்பிரமணியபுரம் உள்ளிட்ட 20-க்கும் அதிகமான கிராம மக்கள் பயன்படுத்தி வந்தனர். 
இந்த நிலையில், அடுத்தடுத்து ஏற்பட்ட வறட்சியின் காரணமாக விவசாயிகள், பொதுமக்கள் ரயில் போக்குவரத்தைக் குறைத்தனர். விசைத்தறி தொழில் நசிவால் ஏற்றுமதி செய்யமுடியவில்லை. கரிவலம்வந்தநல்லூரில் இருந்து பயணிகள் ஏறுவது குறைந்ததால், போக்குவரத்து மற்றும் செலவினத்தை கணக்கில் கொண்டு ரயில்வே நிர்வாகம் இந்த ரயில் நிலையத்தை கடந்த 1983-ல் மூடிவிட்டது.
இதையடுத்து, செங்கோட்டை-சென்னை அகல ரயில்பாதை அமைக்கும் பணி கடந்த 2000 ஆவது ஆண்டு தொடங்கியது. 
2004 இல் அகலப் பாதை பணிகள் முடிந்து ரயில்கள் இயங்கத் தொடங்கின. அப்போது, கரிவலம்வந்தநல்லூர் ரயில் நிலையம் மீண்டும் அமைக்கப்படும் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. தற்போது அங்கு ரயில் நிலையம் இருந்ததற்கான எச்சமாக ரயில் நிலையத்தின் சிதைந்த நுழைவுவாயில் மற்றும் குடியிருப்புகள் மட்டுமே உள்ளன. ரயில் நிலையத்தைச் சுற்றிலும் கருவேல மரங்கள் வளர்ந்து நிற்கின்றன.
தற்போது, செங்கோட்டை-சென்னை மற்றும் செங்கோட்டை-மதுரை நகரங்களுக்கு ரயில்கள் தினமும் சென்று வருவதால், கரிவலம்வந்தநல்லூர் ரயில் நிலையத்தை மீண்டும் சென்னிகுளத்தில் அமைக்கக் கோரி, அப்பகுதி மக்கள் தெற்கு ரயில்வே நிர்வாகத்திடம் மனு அளித்தனர். அதோடு, மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனை சந்தித்தும் அவர்கள் மனு அளித்தனர். என்றாலும், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
இதுகுறித்து சென்னிகுளத்தைச் சேர்ந்த ராமசுப்பிரமணியன் கூறியது: அகல ரயில்பாதை அமைக்கப்பட்ட பிறகு கரிவலம்வந்தநல்லூர் ரயில் நிலையம் திறக்கப்படும் என ரயில்வே நிர்வாகத்தினர் கூறினர். ஆனால், திறக்கப்படவில்லை. எனினும், கரிவலம்வந்தநல்லூர் ரயில் நிலையத்தை திறக்க வேண்டும் என மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளோம். இங்குள்ள  20-க்கும் அதிகமான கிராமங்களில் இருந்து விவசாயிகள், வியாபாரிகள் அதிக அளவில் மதுரைக்குச் சென்றுவருகின்றனர். அவர்கள் இந்த ரயில் நிலையத்தை பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். அதோடு, கரிவலம்வந்தநல்லூர் முக்கியமான அக்னி ஸ்தலம். நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் நேராக இங்கு வந்துசெல்ல இந்த ரயில் நிலையம் பயன்படும் என்றார் அவர்.
அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி நாராயணசாமி கூறியதாவது: இங்கு விவசாயிகள் அதிகமாக இருக்கிறோம். இங்கிருந்து ராஜபாளையம், மதுரைக்கு 2 மூட்டை காய்கறிகளை பஸ்ஸில் கொண்டுபோக அவர்களிடம் மல்லுக்கட்ட வேண்டியுள்ளது. ஆனால், ரயில் ஓடினால் ராஜபாளையம் சந்தையில் கொண்டுபோய் விற்பதற்கு செளகரியமாக இருக்கும். அதனால் இங்கு ரயில்வே ஸ்டேஷனை திரும்பவும் கொண்டுவர வேண்டும் என்றார் அவர்.
இதுகுறித்து தெற்கு ரயில்வே மதுரைக் கோட்ட மேலாளர் லெனினிடம் வெள்ளிக்கிழமை கேட்டபோது, "கரிவலம்வந்தநல்லூர் ரயில் நிலையத்தை மீண்டும் செயல்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை; அந்தப் பகுதி மக்கள் மனு அளித்துள்ளது குறித்த விவரம் ஏதும் வரவில்லை' என்றார்.
ஆனால் கரிவலம்வந்தநல்லூரில் ரயில் நிலையம் மீண்டும் இயங்க வேண்டும் என்ற கனவை நனவாக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com