தென்காசியில் விவசாயிகளுக்கும், பொது மக்களுக்கும் பயன்பெறாத வகையில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. எனவே இதனை மக்கள் பயன்பெறும் வகையில் நகரின் மையப்பகுதிக்கு மாற்ற வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
விவசாயிகளும், பொதுமக்களும் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் கடந்த 2000 ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி உழவர்சந்தை திட்டத்தை தமிழகம் முழுவதும் செயல்படுத்தினார். அப்போது தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் இந்த உழவர் சந்தை செயல்படத் தொடங்கியது.
இந்த சந்தை தொடங்கிய காலகட்டத்தில் தென்காசி, அச்சன்புதூர், வாவாநகரம், பண்பொழி, வடகரை, பாவூர்சத்திரம், மத்தளம்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 600 விவசாயிகள் உழவர் சந்தையில் உறுப்பினர்களாக இருந்தனர்.
விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த காய் கனிகளை பேருந்தில் கொண்டு வருவதற்கு எந்தவிதமான கட்டணங்களும் வசூலிக்கக்கூடாது, தென்காசி உழவர் சந்தையின் முன்பு காய் கனிகளை ஏற்றி வரும் பேருந்துகள் நின்று செல்ல வேண்டும் என அப்போதைய மாவட்ட ஆட்சியர் தனவேலு உத்தரவிட்டார். அப்பகுதியில் ஒரு பேருந்து நிறுத்தம் அமைக்க நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. சில ஆண்டுகள் சிறப்பாக செயல்பட்டது இந்த உழவர் சந்தை.
இந்த உழவர்சந்தை தொடங்கும் போது நிர்வாக அலுவலர், இரண்டு உதவி அலுவலர்கள், துப்புரவுப்பணியாளர், காவலாளி உள்ளிட்டோர் பணியிலிருந்தனர். தற்போது ஒரு நிர்வாக அலுவலர் மற்றும் இரண்டு உதவி அலுவலர்கள் மட்டும் இங்கு பணியில் உள்ளனர். 39 விவசாயிகள் மட்டுமே தற்போது உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களும் பெரும்பாலும் இந்த உழவர் சந்தைக்கு காய் கனிகளை கொண்டு வருவதில்லை. ஒன்று அல்லது இரண்டு விவசாயிகள் மட்டுமே இந்த உழவர் சந்தைக்கு காய் கனிகளை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.
இந்த உழவர் சந்தையில் 60 கடைகள் அமைந்துள்ளன. ஆனால் ஒன்று அல்லது இரண்டு கடைகளில் மட்டுமே விவசாயிகள் வருவதால் மற்ற பகுதிகள் முழுவதும் செடி, கொடிகள் வளர்ந்து முள்புதராக காட்சியளிக்கிறது. நிர்வாக அலுவலர் அலுவலகம் முழுவதுமாக சேதமடைந்து எந்த விதமான பாதுகாப்புமின்றி உள்ளது. அதேபோல் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள கழிப்பிட பகுதிக்கு யாரும் செல்ல முடியாத நிலை உள்ளது.
இது குறித்து விவசாயிகள் கூறியது; இப்பகுதி பொதுமக்கள் அதிகமாக வந்து செல்லும்பகுதியாக இல்லாதது பெரிய
குறையாகும். அதிகளவில் விவசாயிகள் காய் கனிகளை கொண்டு வந்தாலும் இங்கு விற்பனையாவதில்லை. சில நேரங்களில் போக்குவரத்து செலவிற்கு கூட வருவாய் கிடைப்பதில்லை. மேலும் இரு சக்கர வாகனங்களில் செல்லும் வியாபாரிகள் வீட்டு வாசலுக்கே சென்று விற்பனை செய்துவருகின்றனர்.
பொதுமக்கள் அதிகமாக வந்து செல்லும் பகுதி, தென்காசி பழைய பேருந்து நிலையம், தெப்பக்குளம் அல்லது நகரின் மையப்பகுதியில் உழவர்சந்தை அமைந்தால் மேலும் சிறப்பாக செயல்படும் என்றனர்.
இதுகுறித்து உழவர்ச ந்தை அதிகாரிகளிடம் கேட்டபோது, இங்கு விவசாயிகள் வந்து பயன் பெறுவதற்காக அருகிலுள்ள ஊர்களுக்கு சென்று சிறப்பு முகாம் நடத்தி வருகிறோம். அரசு நிதி கிடைக்கப்பெற்றவுடன் உழவர் சந்தையை சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்டப்பட்டு பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவுள்ளோம். இச்சந்தையை சிறப்பாக செயல்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டுவருகிறோம் என்றனர்.
தென்காசி சுற்றுப்புறப் பகுதியில் விவசாயிகள் அதிகமாக உள்ளனர். விவசாயிகள் பயன்பெறும் வகையில் உழவர்சந்தை நகரின் மையப்பகுதியில் அமைந்தால் இத்திட்டம் எதற்காக கொண்டுவரப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேறும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.