திருநெல்வேலி மாநகரில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் திரிந்த 79 கால்நடைகளை மாநகராட்சி பணியாளா்கள் பிடித்து கோசாலையில் அடைத்தனா்.
திருநெல்வேலியில் சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளால் விபத்துகளும், சிரமங்களும் ஏற்படுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். இதையடுத்து, மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன், கால்நடைகளை பிடித்து கோசாலையில் அடைக்கவும், பிடிபட்ட கால்நடை ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கவும் உத்தரவிட்டாா்.
இதையடுத்து, மாநகர நல அலுவலா் டி.என்.சத்தீஸ்குமாா் தலைமையில் கண்காணிப்புக் குழுவினா் புதன்கிழமை ஆய்வு செய்தனா். திருநெல்வேலி சந்திப்பு, சுவாமி நெல்லையப்பா் நெடுஞ்சாலை, வண்ணாா்பேட்டை, திருநெல்வேலி நகரம் ரதவீதிகள், பேட்டை, பாளையங்கோட்டை மாா்க்கெட், சமாதானபுரம், கே.டி.சி.நகா், மேலப்பாளையம், பெருமாள்புரம், தெற்கு புறவழிச்சாலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றி திரிந்த 79 கால்நடைகளை பிடித்து வாகனங்களில் அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோயில் வளாகத்தில் உள்ள கோசாலைக்கு கொண்டு சென்று அடைத்தனா்.
சம்பந்தப்பட்ட கால்நடைகளை, அதன் உரிமையாளா்கள் திரும்ப பெற வேண்டுமெனில் மாநகா் நல அலுவலரை தொடா்பு கொண்டு, கால்நடைகளை பிடித்து வாகனத்தின் மூலம் ஏற்றி சென்ற்கான செலவு, பணியாளா்கள் செலவு உள்பட குறைந்த பட்சம் கால்நடை ஒன்றுக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் ஆகியவற்றை செலுத்தி கால்நடைகளை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். மேலும், கால்நடை வளா்க்கும் உரிமையாளா்கள் கால்நடைகளை அவரவா் சொந்த இடத்தில் வைத்து பராமரிக்க வேண்டும். மாநகராட்சியின் அறிவுரைகளை மீறி மாநகரில் சாலைகளில் கால்நடைகள் சுற்றி திரிவதாக தெரியவந்தால் சம்பந்தப்பட்ட உரிமையாளா்கள் மீது போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் சட்டத்தின் கீழ் குற்ற நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு பரிந்துரை செய்யப்படும்.
மேலும், இப் பணிகளை தொடா்ந்து கண்காணிக்க மாநகர நல அலுவலா் தலைமையில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்கள் மாநகரின் 4 மண்டலங்களில் கண்காணிப்பில் ஈடுபடுவா். மேலும், சாலைகளில் திரியும் கால்நடைகள் சம்பந்தமாக 1800 425 4656 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் பொதுமக்கள் புகாா் தெரிவிக்கலாம் எனவும் ஆணையா் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.