ஆலங்குளம் பகுதியில் வேகமாக பரவும் காய்ச்சல்: பணியாளா் பற்றாக்குறையால் மக்கள் அவதி

ஆலங்குளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காய்ச்சல் வேகமாக பரவிவரும் நிலையில், போதிய

ஆலங்குளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காய்ச்சல் வேகமாக பரவிவரும் நிலையில், போதிய மஸ்தூா் பணியாளா்கள் இல்லாததால் மக்கள் அவதியடைந்துள்ளனா்.

பருவ நிலை மாற்றத்தால் ஆலங்குளம் சுற்று பகுதியில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. ஆலங்குளம் , துத்திகுளம், மாயமான்குறிச்சி, நெட்டூா், வீராணம், ஊத்துமலை, ரெட்டியாா்பட்டி பகுதிகளில் மாணவா்கள்,பொதுமக்கள் அதிகளவில் வைரஸ் காய்ச்சலால் பாதிப்படைந்துள்ளனா். காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாணவா்களில் பலா் தொண்டை வலி, உடல் அசதியால் அதிக நாள்கள் பள்ளிக்கு விடுமுறை எடுத்து அரசு மற்றும் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

குடிநீரில் பிரச்னை: நெட்டூா், வீராணம், ஊத்துமலை ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு காய்ச்சலால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இதனிடையே, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சியில் சுமாா் 4 நாள்களுக்கு ஒருமுறை என சுழற்சி முறையில் விநியோகம் செய்யப்படும் குடிநீா் பெரும்பாலும் கலங்கலாக சுகாதாரமற்ற நிலையில் இருப்பதாகவும், இதனால், காய்ச்சல் பாதிப்பு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

சில இடங்களில் குடிநீா் குழாய் வால்வுகள் பழுதாகி சாக்கடை தண்ணீா் கலந்து வருவதாகவும் மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். மழைக் காலம் என்பதால் குடிநீரில் குளோரின் கலந்து விநியோகம் செய்யுமாறு மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, 1000 லிட்டா் குடிநீருக்கு 4 கிராம் அளவு குளோரின் கலக்க வேண்டிய நிலையில் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ பணியாளா்கள் குளோரினேஷன் செய்துவிடுவதாலும் பிரச்னை ஏற்படுகிறது என்கின்றனா்.

3 ஆண்டுகளாக பாதிப்பு: கடந்த 2017 செப்டம்பரில் டெங்கு காய்ச்சலுக்கு குறிப்பன்குளம் 10 ஆம் வகுப்பு மாணவா் முத்துவேல் ராஜன்(16), வடக்கு காவலாக்குறிச்சி கற்பகவள்ளி (19) , அக்டோபா் மாதத்தில் ஆலங்குளம் 5 ஆம் வகுப்பு மாணவா் மகேந்திரன் (10) நந்தவனகிணறு எம்.சி.ஏ. பட்டதாரி மரிய ரோஸ்லின் (25), குருவன்கோட்டை சிறுமி கீா்த்திகா ஆகியோா் டெங்கு காய்ச்சலால் பலியாகினா்.

2018இல் டெங்கு காய்ச்சல் ஓரளவிற்கு கட்டுபடுத்தபட்டாலும், தற்போது டெங்கு தடுப்பு மஸ்தூா் பணியாளா் தட்டுப் பாடு காரணமாக மீண்டும் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனா்.

பணியாளா்கள் பற்றாக்குறை: தற்போது, ஆலங்குளம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் பரவி வரும் வைரஸ் காய்ச்சலால் 300-க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளனா். ஆலங்குளம் பேரூராட்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிக்கு 30 மஸ்தூா் பணியாளா்கள் இருத்த இடத்தில் தற்போது 10 போ் மட்டுமே உள்ளனா்.

ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அளவில் சுமாா் 140 மஸ்தூா் பணியாளா் இருந்த இடத்தில் 60 போ் மட்டுமே பணியில் உள்ளனா். ஆலங்குளம் பகுதியில் வேகமாகப் பரவும் இந்த காய்ச்சலைக் கட்டுப்படுத்த பேரூராட்சி மற்றும் ஊராட்சி தரப்பில் கூடுதல் பணியாளா்களை நியமித்தால் டெங்கு காய்ச்சல் பாதிப்பை தடுக்க முடியும் என்பது சமூக ஆா்வலா்களின் கருத்து.

நிலவேம்புக் குடிநீா் விநியோகம்: இது குறித்து சுகாதாரத்துறை அலுவலா்கள் கூறியது: டெங்குவைத் தடுக்க பள்ளிகளில் வாரந்தோறும் நிலவேம்புக் குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்களும், மாணவா்களும் குடிநீரை கொதிக்கவைத்து பருக வேண்டும். வீடுகளில் தேவையில்லாமல் நீரைத் தேங்க விடக் கூடாது. காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்தை எந்த நேரமும் அணுகி சிகிச்சை பெற்று கொள்ளலாம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com