கடையம் வில்வ வனநாதர் கோயில் சித்திரைத் திருவிழா கால்நாட்டு
By DIN | Published On : 01st April 2019 02:22 AM | Last Updated : 01st April 2019 02:22 AM | அ+அ அ- |

கடையம் நித்யகல்யாணி அம்பாள் உடனுறை வில்வ வனநாதர் சுவாமி கோயில் சித்திரைத் திருவிழாவுக்கான கால்நாட்டு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கடையம் வில்வ வனநாதர் கோயில் சித்திரைத் திருவிழா ஏப்.10 முதல் ஏப். 19 வரை நடைபெறுகிறது. இதையொட்டி, ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும், தொடர்ந்து கால்நாட்டு நிகழ்ச்சியும் நடைபெற்றன.
ஏப். 10 ஆம் தேதி (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது. விழா நாள்களில் தினமும் சுவாமி- அம்பாள் பல்வேறு வாகனங்களில் காலையும், மாலையும் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.
ஏப். 16ஆம் தேதி இரவு நடராஜர் சிவப்பு சாத்தி, ஏப். 17இல் காலை வெள்ளை சாத்தியும், மாலையில் பச்சை சாத்தியும் நடைபெறும். ஏப். 18ஆம் தேதி(வியாழக்கிழமை) காலை 3 மணிக்கு சுவாமி- அம்பாள் தேருக்கு எழுந்தருளலும், காலை 7.40 மணிக்கு தேரோட்டமும் நடைபெறும். ஏப். 19இல் (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு சித்ரா பெளர்ணமி மண்டகப்படிக்கு சுவாமி- அம்பாள் எழுந்தருளலும், முற்பகல் 11 மணிக்கு தீர்த்தவாரியும் நடைபெறுகின்றன. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர் கோ.தேவி, ஆய்வாளர் ச.முருகன், தக்கார் ரா. சீதாலட்சுமி மற்றும் விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.