தேர்தல் பணியில் ஈடுபடும் 14,667 பேருக்கு பயிற்சி
By DIN | Published On : 01st April 2019 02:21 AM | Last Updated : 01st April 2019 02:21 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என மொத்தம் 14,667 பேருக்கு முதல்கட்ட பயிற்சி வகுப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான முதல்கட்ட பயிற்சி வகுப்பு 10 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் நடைபெற்றது. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதி அம்பாள் மேல்நிலைப் பள்ளியில் 1,482 பேருக்கும், சிவகிரி விவேகா மெட்ரிக். பள்ளியில் 1,069 பேருக்கும், கொடிக்குறிச்சி ஸ்ரீராம் நல்லமணி யாதவா கலைக் கல்லூரியில் 1,290 பேருக்கும், குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியில் 1,672 பேருக்கும், ஆலங்குளம் சர்தார் ராஜா பொறியியல் கல்லூரியில் 1,155 பேருக்கும், சேரன்மகாதேவி ஸ்காட் பொறியியல் கல்லூரியில் 1,604 பேருக்கும், வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லுரியில் 1,770 பேருக்கும், பொன்னாக்குடி ரோஸ்மேரி கலைக் கல்லூரியில் 1,347 பேருக்கும், வள்ளியூர் பாத்திமா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1,716 பேருக்கும் என திருநெல்வேலி, தென்காசி மக்களவைத் தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடும் 14 ஆயிரத்து 667 ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் பயிற்சி வகுப்பை ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தொடங்கிவைத்துப் பேசியதாவது:
வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் அலுவலர்களுக்கு அஞ்சல் ஓட்டுக்கான விண்ணப்பப் படிவம் பயிற்சி நடைபெறும் மையங்களில் வழங்கப்பட்டுள்ளது. மின்னணு இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்தும், வாக்குப்பதிவு நாளன்று செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பணிபுரியும் அலுவலர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது.
வாக்குச்சாவடி அலுவலர்கள் அனைவரும் தேர்தலில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை தெரிந்துகொள்ள வேண்டும். தேர்தல் விதிகளை முறையாக கடைப்பிடித்து, எந்தத் தவறும் நடைபெறாமல் தேர்தலை அமைதியான முறையில் நடத்த வேண்டும். இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு வரும் 7-ஆம் தேதி நடைபெறும் என்றார்.
நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையர் விஜயலட்சுமி, பாளையங்கோட்டை வட்டாட்சியர் கனகராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.