நெல்லையில் கோஷ்டி மோதல்: மூவர் காயம்; வாகனங்கள் உடைப்பு
By DIN | Published On : 01st April 2019 10:12 AM | Last Updated : 01st April 2019 10:12 AM | அ+அ அ- |

திருநெல்வேலி நகரம் கோட்டையடி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 3 பேர் காயமடைந்தனர். கார், இருசக்கர வாகனங்கள் உடைக்கப்பட்டதால் பதற்றம் நிலவியது.
திருநெல்வேலி நகரம் பாறையடி, கோட்டையடி பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் ஞாயிற்றுக்கிழமை இரவு கோட்டையடி பகுதியில் நின்று பேசிக்கொண்டிருந்தனராம். அப்போது அவர்களுக்குள் திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இருதரப்பினரும் ஒருவரையொருவர் கற்களை வீசி தாக்கிக்கொண்டனராம்.
மேலும், பாறையடியைச் சேர்ந்த சுடலைமணி மகன்கள் சங்கர் (22), சதீஷ் (19) மற்றும் கெளதம் (20) ஆகியோருக்கு அரிவாள்வெட்டு விழுந்தது; அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார், 2 இருசக்கர வாகனங்கள், வீடுகளின் முன் வைக்கப்பட்டிருந்த பூந்தொட்டிகள் சேதப்படுத்தப்பட்டன.
இத்தகவலறிந்த திருநெல்வேலி நகரம் காவல் உதவி ஆணையர் சதீஷ்குமார் தலைமையிலான போலீஸார், மோதலில் காயமடைந்தவர்களை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, பாறையடி, கோட்டையடி பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதிமுக மாணவரணி கூட்டத்தில் பங்கேற்றது தொடர்பாக இருதரப்பினருக்கும் பிரச்னை ஏற்பட்டது தெரியவந்ததாகவும், இது தொடர்பாக 2 பேரை பிடித்து விசாரித்து வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.