வறட்சி காலத்தில் அணைகளில் மராமத்துப் பணி செய்யப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் வறட்சி காலத்தில் அணைகளைத் தூர்வாரவும்,  மராமத்துப் பணிகளைச் செய்யவும் 

திருநெல்வேலி மாவட்டத்தில் வறட்சி காலத்தில் அணைகளைத் தூர்வாரவும்,  மராமத்துப் பணிகளைச் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் 2018 ஆம் ஆண்டு வடகிழக்குப் பருவமழை போதிய அளவில் பெய்யவில்லை. திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மட்டும் மழை பெய்ததால் தாமிரவருணி நதியின் கீழ் உள்ள வடக்கு மற்றும் தெற்கு கோடைமேழலகியான்,  நதியுன்னி,  கன்னடியன், பாளையங்கால்வாய் பகுதிகளில் பிசான பருவ சாகுபடி நடைபெற்றது. பாளையங்கால்வாய் பகுதிகளில் இப்போது அறுவடைப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. 
திருநெல்வேலி மாவட்டத்தில் 1221 கால்வரத்து குளங்களும்,  1297 மானாவாரி குளங்களும் என மொத்தம் 2 ஆயிரத்து 518 குளங்கள் உள்ளன.  வேளாண் துறையினரின் கணக்கெடுப்பின்படி 2100 குளங்கள் வறட்சியின் பிடிக்கு சென்றுள்ளது தெரியவந்துள்ளது.
வறட்சியின் பிடியில் அணைகள்: கோடைக்காலத்தில் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்யும்.  ஆனால், கடந்த சில நாள்களுக்கு முன்பு குற்றாலம் பகுதியில் மட்டும் மழை பெய்தது.  பாபநாசம் முதல் ராதாபுரம் வரையிலான பகுதிகளிலும், திருநெல்வேலி-சங்கரன்கோவில் பகுதிகளிலும் கோடை மழையே பெய்யாததால் கடுமையான அனல்காற்று வீசி வருகிறது.  
வடகிழக்குப் பருவமழையின் போது உயர்ந்த பிரதான அணைகளின் நீர்மட்டம்,  மிகவும் வேகமாக சரிந்து வருகின்றன.  ஏற்கெனவே வடக்குப் பச்சையாறு, கொடுமுடியாறு அணைகள் வறண்டு விட்ட நிலையில் இப்போது அடவிநயினார் அணையும் வறட்சியின் பிடியில் சிக்கும் நிலையில் உள்ளது.
வெள்ளிக்கிழமை நிலவரப்படி 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 32.95  அடியாகவும், 156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 47.93 அடியாகவும், 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 81.73 அடியாகவும் சரிந்துள்ளன. இதேபோல கடனாநதி- 34.70  அடி, ராமநதி-25, கருப்பாநதி- 37.97, குண்டாறு-11.62, வடக்குப் பச்சையாறு-2.75, நம்பியாறு-12.33, கொடுமுடியாறு-2, அடவிநயினார்-19 அடி நீர்மட்டம் உள்ளது.
மராமத்து பணிகள் போதாது: இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் வேலுமயில் கூறியது:  இம் மாவட்டத்தில் அணைகள், குளங்கள், பாசன கால்வாய்களில் மராமத்து பணிகள் போதிய அளவில் செய்யப்படவில்லை.
பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகள் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளன.  இதுகுறித்து விவசாயிகள் குறைதீர் கூட்டம் மற்றும் முதல்வருக்கு மனுக்கள் அனுப்பியும் நடவடிக்கைகள் இல்லை.
 வனப்பகுதிகளில் உள்ள அணைகளுக்கான நீர்வரத்து ஓடைகள், சிறிய தடுப்பணைகளின் சேதங்கள் போன்றவற்றை இந்த வறட்சி காலத்தில் கண்டறிந்து மராமத்து செய்தால் மழைக்காலங்களில் கூடுதலாக பலனளிக்கும். 
 மக்கள் பிரதிநிதிகளிடம் இதுகுறித்து கோரிக்கை வைத்தால் உடனே செய்து தருவதாக வாக்குறுதி மட்டுமே அளிக்கிறார்கள் செயல்படுத்துவதில்லை.  உலக வங்கி நிதியுதவியோடு சில குளங்களில் கரைகளை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்றுள்ளன.  அதேபோல தேர்தல் முடிந்ததும் அணைகள் மற்றும் கால்வாய்களைத் தூர்வார மத்திய-மாநில அரசுகள் சிறப்பு நிதிகளை ஒதுக்கி கோடைக்காலத்தில் நீர்நிலைகளைத் தயார்படுத்தும் பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்றார்.
ஆக்கிரமிப்புகள் அதிகம்: வடகரையைச் சேர்ந்த விவசாயி ஜாஹீர் கூறியது: அடவிநயினார், கருப்பாநதி ஆகிய அணைகள் மூலம் 25-க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் பயன்பெற்று வருகிறார்கள்.  15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த அணைகள் தூர்வாரப்படாததால் சகதி மற்றும் மணல் திட்டுகள் உருவாகி அணையின் கொள்ளளவு குறைந்துள்ளது.  அதேபோல பாசனக் கால்வாய்கள், குளங்களில் ஆண்டுதோறும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன.  
இதுகுறித்து முறையிட்டால் அளவீடு செய்து ஆக்கிரமிப்பை அகற்றாமல் வருவாய் துறையினரும், பொதுப்பணித்துறையினரும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டுவதே வழக்கமாக உள்ளது. 
கோடைக்காலத்தில் பாசனக் கால்வாய்,  நதிகளில் அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றினால் மழைக்காலங்களில் சேதங்களைத் தவிர்க்க முடியும்.  நீரோட்டமும் நன்றாக இருக்கும்.  இந்த விஷயத்தில் மத்திய-மாநில அரசுகள் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com