சித்திரைத் திருவிழா: சங்கரன்கோவில், இலஞ்சி, கடையம் கோயில்களில் கொடியேற்றம்
By DIN | Published On : 11th April 2019 07:41 AM | Last Updated : 11th April 2019 07:41 AM | அ+அ அ- |

சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக கொடிப்பட்டம் வீதி சுற்றி வந்து, சங்கரலிங்க சுவாமி சன்னதி முன்பு உள்ள கொடிமரத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு கொடிப்பட்டத்துக்கு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து கொடியேற்றப்பட்டது.
பின்னர் கொடிமர பீடத்துக்கு பால், பன்னீர்,இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையானஸ்ரீஞ் அபிஷேகங்களைத் தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது.
தேரோட்டம்: 9ஆம் திருநாளான ஏப்.18 ஆம் தேதி சுவாமி, அம்பாள் தனித்தனியே எழுந்தருளும் தேரோட்டம் நடைபெறும். 10ஆம் திருநாளான ஏப்.19 ஆம் தேதி சுவாமி, அம்பாள் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கும் வைபவம் நடைபெறுகிறது. கொடியேற்ற நிகழ்ச்சியில், கோயில் துணை ஆணையர் செல்லத்துரை, பி.ஆர்.ராமசுப்பிரமணியராஜா, முன்னாள் ஆவின் தலைவர் ரமேஷ், கோமதிஅம்பிகை மாதர் சங்க அமைப்பாளர் பட்டமுத்து உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இலஞ்சி திருவிலஞ்சிக்குமாரர் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்தை, தொடர்ந்து அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இரவில் ஏக சிம்மாசன வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.
விழா நாள்களில் நாள்தோறும் காலை மற்றும் இரவில் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெறுகிறது.
விழாவில், 17ஆம் தேதி காலையில் நடராஜருக்கு பச்சை சாத்தியும், 18ஆம் தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது. 19ஆம் தேதி காலை தீர்த்தவாரி, தீபாராதனை நடைபெறுகிறது. கொடியேற்ற நிகழ்ச்சியில் கோயில் செயல் அலுவலர் இரா.முருகன், அன்னதானக்குழுத் தலைவர் அன்னையாபாண்டியன், திருவிலஞ்சிக்குமரன், ராஜாமணி, குற்றாலம் வர்த்தக சங்கத் தலைவர் காவையா உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
கடையம் நித்யகல்யாணி அம்பாள் உடனுறை வில்வவனநாதர் சுவாமி கோயிலில் புதன்கிழமை காலை 9 மணிக்கு சித்திரை பெருந்திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து கொடிமரம், நந்தி, பலிபீடத்துக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனை நடைபெற்றது. தினந்தோறும் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் காலை, மாலை வீதி உலா நடைபெறும். ஏப். 16 ஆம் தேதி நடராஜர் சிவப்பு சாத்தியும், ஏப். 17இல் காலை வெள்ளைசாத்தியும், மாலை பச்சை சாத்தியும் நடைபெறுகிறது. ஏப். 18 ஆம் தேதி காலை 3 மணிக்கு சுவாமி அம்பாள் தேருக்கு எழுந்தருளலும், தொடர்ந்து தேரோட்டமும் நடைபெறுகிறது.
ஏப். 19 ஆம் தேதி காலை 9 மணிக்கு சித்ரா பெளர்ணமி மண்டகப்படிக்கு சுவாமி அம்பாள் எழுந்தருளலும், 11 மணிக்கு தீர்த்தவாரியும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர் கோ.தேவி, ஆய்வாளர் ச.முருகன், தக்கார் ரா. சீதாலட்சுமி மற்றும் விழா கமிட்டியினர் செய்துவருகின்றனர்.
களக்காடு வரதராஜ பெருமாள் கோயிலில்...
களக்காடு, ஏப். 10: களக்காடு வரதராஜபெருமாள் கோயில் பங்குனித் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி, கோயிலில் பெருமாளுக்கு காலையில் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பின் கோயில் கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டு, பெருமாளுக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. தினமும் இரவு பெருமாள் வீதியுலா நடைபெறும். ஏப். 14இல் இரவு கருட சேவை, ஏப்.16இல் மாலை 5.30க்கு திருக்கல்யாணம், ஏப்.19இல் மாலை 6.30க்கு தேரோட்டம் நடைபெறும்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G