கோடை மாங்காய் விளைச்சல் அமோகம்: சூறைக்காற்றால் சேதம்: விவசாயிகள்  கவலை

திருநெல்வேலி மாவட்டத்தில் நிகழாண்டில் கோடை மாங்காய் விளைச்சல் நன்றாக உள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் நிகழாண்டில் கோடை மாங்காய் விளைச்சல் நன்றாக உள்ளது. அதேநேரம், கோடை மழையின்போது வீசும் பலத்த காற்றால் முதிர்ச்சியடையும் முன்பாகவே மாங்காய்கள் உதிர்வதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
தமிழகத்தில் ஆண்டுதோறும் மே முதல் வாரத்தில் தொடங்கும் கோடை மாம்பழ சீசன் ஆகஸ்ட் மாதம் வரை நீடிக்கும். திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளில் மாமரங்கள் அதிகளவில் உள்ளன.
செங்கோட்டை, தென்காசி, கடையம், ஆழ்வார்குறிச்சி, களக்காடு பகுதிகளில் மாங்காய் உற்பத்தி அதிகம். இம்மாவட்டத்தில் 6,200 ஹெக்டேரில் மாந்தோட்டங்கள் உள்ளன. செந்தூரம், நீலம், பெங்களூரா, பங்கனப்பள்ளி, அல்போன்சா, இமாம்பசந்த் ஆகிய ரகங்கள் பயிரிடப்படுகின்றன. கோடை சீசனில் முதலில் செந்தூரமும், பங்கனப்பள்ளியும், இறுதியாக நீலமும் விற்பனைக்கு வரும். செந்தூரம், அல்போன்சா ரகங்கள் முதலில் கிலோ ரூ. 40 முதல் ரூ. 60 வரை விற்பனையாகும். கிளிமூக்கு எனப்படும் நாட்டு மாம்பழங்கள் கிலோ ரூ. 25 முதல் விற்கப்படும்.
விளைச்சல் அதிகம்: இதுகுறித்து திருநெல்வேலியைச் சேர்ந்த மாம்பழ வியாபாரி ஒருவர் கூறியது: மா விளைச்சலுக்கு ஏற்ற பருவநிலை நிகழாண்டில் இருந்துள்ளது. மாமரங்களுக்கு டிசம்பரில் அதிகளவில் தண்ணீர் கிடைத்தால் ஜனவரி, பிப்ரவரியில் பூப்பிடித்து காய்க்கத் தொடங்கும். கடந்த டிசம்பரில் ஓரளவு மழை பெய்ததால் மா விளைச்சல் மிகவும் அதிகமாக உள்ளது. திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மட்டும் அக்டோபர், நவம்பரில் மாங்காய்கள் கிடைக்கின்றன. 
இப்பருவத்தில் பழமாக மாற்றாமல் காயாகவே தமிழகத்தின் அனைத்துச் சந்தைகளுக்கும் வியாபாரிகள் அனுப்புகின்றனர். கோடை மாம்பழ சீசனைக் காட்டிலும் இந்த இடைப்பருவக் காய்ப்பின்போது வருவாய் அதிகம் கிடைத்து வருகிறது. இது, இந்த 2 மாவட்ட மா விவசாயிகளுக்கு கிடைத்த வரப்பிரசாதம். 10 வயதான மா மரம் குறைந்தபட்சம் 60 நாளில் 200 கிலோ காய்க்கும். அதுவே நிகழாண்டில் 250 கிலோ வரை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது என்றார்.
பலத்த காற்றால் சேதம்: இதுகுறித்து பத்மனேரி பகுதியைச் சேர்ந்த மா விவசாயி ஒருவர் கூறியது: எங்கள் பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரம், பச்சையாறு கரையோரப் பகுதிகளில் ஏராளமான மா மரங்கள் உள்ளன. 
இவற்றில் நிகழாண்டில் நன்றாக காய் பிடித்துள்ளது. ஆனால், புதன்கிழமை வீசிய பலத்த காற்று காரணமாக மாங்காய்கள் உதிர்ந்து சேதமாகிவிட்டன. அவற்றைப் பழுக்க வைக்கவும் முடியாது. அதனால் கிலோ ரூ. 1-க்கு சந்தைகளில் விற்பதைத் தவிர வேறு வழியின்றி தவித்து வருகிறோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com