"தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு அறிவியல் ரீதியான பங்களிப்பு தேவை'
By DIN | Published On : 26th April 2019 06:34 AM | Last Updated : 26th April 2019 06:34 AM | அ+அ அ- |

தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு அறிவியல் ரீதியான பங்களிப்பை மாணவர்கள் வழங்க வேண்டும் என்றார் திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் கா. பிச்சுமணி.
தமிழ் துறை சார்பில் பேராசிரியர் சுந்தரனார் அறக்கட்டளை நினைவுச் சொற்பொழிவு அரங்கம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, துணைவேந்தர் பேசுகையில், சுந்தரனாரின் வாழ்க்கை வராலாற்றை மேற்கோள் காட்டி, மாணவர்கள் அனைவரும் அறிவியல் ரீதியாக தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு பங்களிப்பை நல்க வேண்டும் என்றார். பல்கலைக்கழக பதிவாளர் சே. சந்தோஷ்பாபு வரவேற்றார். பேராசிரியர் சுந்தரனாரின் கொள்ளுப் பேரனும், கேரள வேளாண் துறையின் முன்னாள் இணை இயக்குநருமான க. மோதிலால் நேரு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றுப் பேசுகையில், மனோன்மணீயம் சுந்தரனாரின் வாழ்க்கை வரலாற்றில் பலரும் அறியாத தகவல்களை பகிர்ந்து கொண்டார். மேலும், சுந்தரனார் கூறிய இரண்டு முக்கிய கடமைகளான சொற்சுவை, பொருட்சுவை உடைய தமிழ் நூல்களை வெளிக்கொணர வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
இதில், சுந்தரனாரின் குடும்ப உறுப்பினர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவர்- மாணவியர் பங்கேற்றனர். தமிழ்த்துறை தலைவர் ஞா. ஸ்டீபன் நன்றி கூறினார்.