மின்கம்பி அறுந்து விழுந்ததில் ரேஷன்கடை பெண் ஊழியர் காயம்
By DIN | Published On : 26th April 2019 01:30 AM | Last Updated : 26th April 2019 01:30 AM | அ+அ அ- |

கடையத்தில் மின்கம்பி அறுந்து விழுந்ததில் ரேஷன்கடை பெண் ஊழியருக்கு வியாழக்கிழமை பலத்த காயம் ஏற்பட்டது.
கடையம் பகுதியில் கடந்த சில நாள்களாக பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. காற்றினால் ஆங்காங்கே மின்கம்பிகள் அறுந்து விழுந்தன. இந்நிலையில் கடையம் ஒன்றியம், தெற்கு கடையத்தில் அமைந்துள்ள கேளையாபிள்ளையூர் ரேஷன்கடை அருகில் இருந்த மின்கம்பத்திலிருந்து உயரழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததாக கூறப்படுகிறது.
அப்போது, ரேஷன்கடை அருகில் நின்று கொண்டிருந்த கடையின் பெண் ஊழியர் சங்கரசுப்பம்மாள் மீது மின்கம்பி விழுந்தது. அப்போது, மின்சாரம் பாய்ந்ததில் சங்கரசுப்பம்மாள் முகத்தில் தீக்காயம் ஏற்பட்டது. 108 ஆம்புலன்ஸ் மூலம் சங்கரசுப்பம்மாள் தென்காசி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தகவலறிந்த மின்வாரிய பணியாளர்கள் விரைந்து வந்து மின்விநியோகத்தை நிறுத்தி சீரமைப்பு பணியினை மேற்கொண்டனர்.