ஓய்வூதியதாரர்களுக்கு வருமான வரிவிலக்கு வேண்டும்
By DIN | Published On : 04th August 2019 04:02 AM | Last Updated : 04th August 2019 04:02 AM | அ+அ அ- |

ஓய்வூதியதாரர்களுக்கு வருமான வரிவிலக்கு வேண்டும் என, பாளையங்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற மாவட்ட அரசு ஓய்வூதியர்கள் சங்கப் பேரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்துக்கு சங்கத் தலைவர் கு. முத்துசுவாமி தலைமை வகித்தார். செயலர் க. அப்பனசாமி வரவேற்றார். மறைந்த சங்க உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
பொருளாளர் செ.சு. ஜெகநாதன், துணைத் தலைவர் க. சங்கரபாண்டியன் ஆகியோர் அறிக்கைகள் வாசித்தனர்.
ஓய்வூதியதாரர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் மருத்துவப்படியை ரூ. 1,000 ஆக உயர்த்தவேண்டும். ஓய்வூதிய ஒப்படைப்பு பிடித்தம் செய்யும் காலத்தை 12 ஆண்டுகளாகக் குறைக்க வேண்டும். ஓய்வூதியதாரர்களுக்கென நல வாரியம் அமைக்கவேண்டும். ஓய்வூதியர்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்கவேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகள் அடங்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்டக் கருவூல அலுவலர் ஜவகர் சிந்தா, கூடுதல் கருவூல அலுவலர் அனு, பாளையங்கோட்டை உதவிக் கருவூல அலுவலர் ச. லெனின், பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர் சௌந்திரராஜன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர். செயற்குழு உறுப்பினர் முத்துகிருஷ்ணன் நன்றி கூறினார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...