தென்காசி அருள்மிகு காசிவிஸ்வநாத சுவாமி கோயிலின் உப கோயிலான மேலசங்கரன்கோயில் சங்கரநாராயண சுவாமி- கோமதி அம்பாள் கோயிலில் ஆடித் தவசு திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பின்னர், சுவாமி பூங்கோயில் வாகனத்தில் காலை, இரவில் வீதியுலா வருதல் நடைபெற்றது. திருவிழா நாள்களில் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, காலையும் மாலையும் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதியுலா வருதல் நடைபெறும். 11ஆம் நாளான ஆகஸ்ட் 13ஆம் தேதி ஆடித் தவசுக் காட்சியும், 14ஆம் தேதி திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் ந. யக்ஞநாராயணன் தலைமையில் கோயில் பணியாளர்கள் செய்துவருகின்றனர்.
கொடியேற்று விழாவில் திருவிளக்கு பூஜை கமிட்டி தலைவர் அன்னையாபாண்டியன், கூட்டுறவுத் துறை மாரிமுத்து, திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
சின்ன சங்கரன்கோவிலில்... அம்பாசமுத்திரம் அருகேயுள்ள சின்ன சங்கரன்கோவில் அருள்மிகு கோமதி அம்பாள் சமேத அருள்மிகு சங்கரலிங்க சுவாமி திருக்கோயிலில் ஆடித் தவசு திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்றத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு அங்குரார்ப்பணம் நடைபெற்றது. சனிக்கிழமை காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜை நடைபெற்றது. கோயிலைச் சுற்றி கொடிப் பட்டம் எடுத்து வரப்பட்டதையடுத்து, அம்பாள் சன்னதி முன்பு காலை 7 மணிக்கு மேல் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடைபெற்றன. மாலையில் அம்பாள் வீதி உலா நடைபெற்றது. திருவிழா நாள்களில் பல்வேறு வாகனங்களில் அம்பாள் வீதி உலா நடைபெறும். 10ஆம் திருநாளான ஆக. 12ஆம் தேதி காலை 9 முதல் 10.30-க்குள் தீர்த்தவாரியும், இரவு 7.30 மணிக்கு இடப வாகனத்தில் அம்பாள் திருவீதி உலாவும் நடைபெறும்.
ஆக. 13ஆம் தேதி மாலை 6 மணிக்கு சங்கரநாராயணர் தவசுக் காட்சி தரிசனமும், தொடர்ந்து சங்கரலிங்க சுவாமி, அம்பாளுக்கு இடப வாகனத்தில் காட்சி தரிசனமும், இரவு 9 மணிக்கு திருக்கல்யாணமும் நடைபெறும். ஆக. 14ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு சங்கரலிங்க சுவாமி தெப்பத் திருவிழாவும், ஆக. 15ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு அகஸ்தீஸ்வரர் சுவாமி தெப்பத் திருவிழாவும், சுவாமி-அம்பாள் வீதிவுலாவும் நடைபெறும்.
விழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர்கள் சபாபதி, ராஜகோபாலன், செயலர் ராமசாமி உள்ளிட்ட நிர்வாகக் குழுவினர் செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.