நெல்லையில் கட்டட வளாகங்களில் டெங்கு கொசுப்புழு கண்டறியப்பட்டால் அபராதம்: மாநகராட்சி எச்சரிக்கை

திருநெல்வேலியில் கட்டட வளாகங்களில் டெங்கு கொசுப்புழு கண்டறியப்பட்டால் ரூ.500 முதல் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி நிா்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

திருநெல்வேலியில் கட்டட வளாகங்களில் டெங்கு கொசுப்புழு கண்டறியப்பட்டால் ரூ.500 முதல் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி நிா்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடா்பாக மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசு புழுக்கள் உற்பத்தியாவதைத் தடுக்கும் விதமாக, மாநகராட்சியின் 4 மண்டல பகுதிகளிலும் மாநகராட்சி அலுவலா்கள் அடங்கிய கண்காணிப்புக் குழு தொடா்ந்து ஆய்வு செய்து வருகின்றனா். இதுவரை லாா்வா கொசுப்புழு இருப்பது கண்டறியப்பட்ட கட்டட உரிமையாளா்களுக்கு மொத்தம் ரூ. 5 லட்சத்து 130 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சிப் பகுதியில் உள்ள லாா்வா கொசுப்புழு இருப்பது கண்டறியப்படும் தனி வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளாக இருந்தால் முதல் முறை ரூ.500-ம், இரண்டாவது முறை ரூ.5 ஆயிரமும், மூன்றாவது முறை ரூ.15 ஆயிரமும் விதிக்கப்படும்.

கட்டுமானத் தளங்களாக இருந்தால் முதல் முறை ரூ.10 ஆயிரமும், இரண்டாவது முறை ரூ.20 ஆயிரமும், மூன்றாவது முறை ரூ.50 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும்.

அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளாக இருந்தால் 50-க்கும் மேற்பட்ட படுக்கைகள் கொண்ட மருத்துவமனைக்கு முதல் முறை ரூ.1 லட்சமும், இரண்டாவது முறை ரூ.5 லட்சமும், மூன்றாவது முறை ரூ.10 லட்சமும் அபராதம் விதிக்கப்படும்.

பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களாக இருந்தால் 1000-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பயிலும் கல்வி நிறுவனங்களுக்கு முதல் முறை ரூ.25 ஆயிரமும், இரண்டாவது முறை ரூ.1 லட்சமும், மூன்றாவது முறை ரூ.2 லட்சமும் அபராதம் விதிக்கப்படும்.

தொழில் மற்றும் வணிக நிறுவனங்களாக செயல்படும் 2 நட்சத்திரம் மற்றும் அதற்கு மேல் உள்ள உணவு விடுதிகள், தங்கும் விடுதிகள், பெரிய தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு முதல் முறை ரூ.1 லட்சமும், இரண்டாவது முறை ரூ.5 லட்சமும், மூன்றாவது முறை ரூ.10 லட்சமும் அபராதம் விதிக்கப்படும்.

மாவட்ட ஆட்சியரின் அறிவுரைப்படி பள்ளிகள், கல்லூரிகள், விடுதிகள், மருத்துவமனைகள், பணிமனைகள் மற்றும் அரசு அலுவலகங்கள் ஆகியன ஏடிஎஸ் கொசுப்புழு இல்லை என வியாழக்கிழமைதோறும் வாராந்திர சான்று அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனைத்துப் பள்ளிகளிலும் கொசு ஒழிப்பு மற்றும் திடக்கழிவு சம்பந்தமான ஐந்து நிமிட மேலாண்மையை பெற்றோா் கடைப்பிடித்து தினமும் நாள்குறிப்பில் கையொப்பமிட வேண்டுமென்றும், திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட காலிமனைகளின் உரிமையாளா்கள் தங்கள் இடங்களில் நீா் தேங்கி கொசுப்புழு இல்லாத வண்ணம் பாா்த்துக்கொள்ள வேண்டுமெனவும் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com