ஆலங்குளத்தில் பிடிபட்ட ஆஸ்திரேலிய ஆந்தை
By DIN | Published On : 06th February 2019 07:02 AM | Last Updated : 06th February 2019 07:02 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளத்தில் ஆஸ்திரேலிய ஆந்தையை தீயணைப்புப் துறையினர் மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.
ஆலங்குளம் - அம்பாசமுத்திரம் சாலையில் உள்ள தனியாருக்குச் சொந்தமான எரிவாயு உருளை சேமிப்புக் கிடங்கில், திங்கள்கிழமை பிற்பகல் வித்தியாசமான தோற்றத்தில் காட்சியளித்த ஆந்தை ஒன்று வந்து நீண்ட நேரம் இருந்துள்ளது. இதைக் கண்ட தொழிலாளர்கள் ஆலங்குளம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அங்கு சென்ற ஆலங்குளம் நிலைய அலுவலர் (பொ) முருகன் தலைமையிலான வீரர்கள் ஆந்தையை உயிருடன் பிடித்தனர். பிடிபட்ட ஆந்தை ஆஸ்திரேலியா நாட்டு இனத்தைச் சேர்ந்தது என தெரியவந்துள்ளது.
ஆஸ்திரேலியாவிலிருந்து கப்பல் மூலம் வரும் மரத்தடிகள், லாரிகள் மூலம் ஆலங்குளம் வழியாக செங்கோட்டை, பாவூர்சத்திரம் பகுதிகளுக்கு கொண்டு செல்லபடுகிறது. அப்படி வரும் மரத்தடியுடன் சேர்ந்து இந்த ஆந்தை வந்திருக்கலாம் என வனத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பிடிபட்ட ஆந்தையை வனத் துறையினர் ஆலோசனையின்பேரில் தீயணைப்பு வீரர்கள் ஆலங்குளம் ராமர் கோயில் வனப் பகுதியில் விட்டனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...