குற்றாலம் விடுதியில் மாணவிக்கு பாலியல் தொல்லை: 2 பேர் கைது
By DIN | Published On : 06th February 2019 07:05 AM | Last Updated : 06th February 2019 07:05 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்டம், குற்றாலத்தில் தங்கும் விடுதியில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக விடுதி மேலாளர் உள்ளிட்ட இருவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம், குட்டகம் புளியம்பட்டியைச் சேர்ந்த ராஜ்குமார் மகன் கார்த்திக்ராஜா(19), பாலிடெக்னிக் கல்லூரி மாணவர். அதே பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பயின்று வந்த மாணவியும், கார்த்திக்ராஜாவும் கடந்த 31ஆம் தேதி வீட்டைவிட்டு வெளியேறி, பல்வேறு இடங்களுக்குச் சென்றுவிட்டு குற்றாலம் வந்தனர். இங்கு ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கிய நிலையில், கார்த்திக்ராஜா கடந்த 2ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அவருடன் தங்கியிருந்த மாணவி, விடுதி மேலாளர் மற்றும் ஊழியரிடம் கூறினாராம். இதையடுத்து, விடுதி மேலாளர் குற்றாலம் காவல் நிலையத்திற்கு அளித்த தகவலின்பேரில், போலீஸார் அங்கு சென்று கார்த்திக்ராஜாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இதுகுறித்து சந்தேக மரணம் என வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், கார்த்திக்ராஜாவின் பெற்றோர் தங்களுடைய மகன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளனர். இதனிடையே, கல்லூரி மாணவியின் உறவினர் அளித்த புகாரின்பேரில், மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக விடுதியின் மேலாளர் ஜலால் (65), ஊழியர் கருப்பசாமி (45) ஆகியோரை குற்றாலம் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...