சங்கரன்கோவிலில் நடப்பு ராபி பருவ உளுந்துக்கான அரசு கொள்முதலை மாவட்ட வருவாய் அலுவலர் பூ.முத்துராமலிங்கம் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தார்.
திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மத்திய அரசின் ஆதார விலை திட்டத்தின் கீழ் நடப்பு (2018-19ஆம் ஆண்டு) ராபி பருவ குறைந்தபட்ச ஆதார விலை கொள்முதல் திட்டத்தின் கீழ் விவசாயிகளிடமிருந்து உளுந்து கொள்முதல் செய்தலை தொடங்கிவைத்து மாவட்ட வருவாய் அலுவலர் பூ.முத்துராமலிங்கம் பேசியதாவது:
மத்திய அரசின் விலை ஆதாரத் திட்டத்தின் கீழ் திருநெல்வேலி மாவட்ட விவசாயிகளிடமிருந்து 3,200 மெட்ரிக் டன் உளுந்து தேசிய வேளாண்மை கூட்டுறவு இணையத்திற்காக அரசால் கொள்முதல் செய்யப்படவுள்ளது. மேலும், விவசாயிகள் விளைவிக்கும் உளுந்துப் பயிர்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் தமிழக அரசு பிப்ரவரி 1 முதல் மே 31 வரை குறைந்தபட்ச ஆதார விலையாக கிலோ ஒன்றுக்கு ரூ.56 வீதம் கொள்முதல் செய்திட ஆணையிட்டு, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் நிலச்சிட்டா அடங்கல், ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு புத்தக முதல் பக்கம் மற்றும் கடைசி பதிவு பக்கம் ஆகிய விவரங்களுடன் தங்களுக்கு அருகிலுள்ள திருநெல்வேலி விற்பனைக் குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.
சங்கரன்கோவில், தென்காசி, ராமையன்பட்டி, கடையநல்லூர், பாவூர்சத்திரம் ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் உளுந்து கொள்முதல் செய்யப்படுகிறது. எனவே, நடப்பு ராபி பருவத்தில் உளுந்து சாகுபடி செய்துள்ள விவசாயிகள் இத்திட்டத்தில் சேர்ந்து தங்களது தரமான விளைபொருளுக்கு அதிகபட்ச விலை பெற்று பயனடைய வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில், வேளாண்மைத் துறை இணை இயக்குநர் பாலசுப்பிரமணியன், வேளாண் வணிக துணை இயக்குநர் நாகராஜன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சத்யஜோஸ், விற்பனைக் குழு செயலர் மல்லிகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.