திருநெல்வேலி மாவட்டத்தில் ஜாக்டோ-ஜியோ போராட்டத்தின்போது கைது செய்யப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 17 ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையை ரத்துசெய்யக் கோரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.
இதுதொடர்பாக ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் அளிக்கப்பட்ட மனு: தமிழகம் முழுவதும் கடந்த ஜன.22ஆம் தேதி முதல் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் காலவரம்பற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. இம்மாவட்டத்திலும் 9 நாள்கள் போராட்டம் நடைபெற்றது. பின்னர் 29ஆம் தேதி இப்போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
இம்மாவட்டத்தில் 17 ஆசிரியர்கள் மட்டும் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறி தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மீதான துறை ஒழுங்கு நடவடிக்கை மற்றும் எதிர் குற்றவியல் வழக்கு நடவடிக்கை விதிகளில் அடிப்படை விதி 54இல் குற்றச்சாட்டுகளின் பேரில் 48 மணி நேரம் சிறை வைக்கப்பட்டால் அரசு அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்படுவார் என தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையிலும், அண்டை மாவட்டங்களில் நடவடிக்கை எடுக்கப்படாததைக் கருத்தில் கொண்டும், இம்மாவட்டத்தில் 17 ஆசிரியர்கள் மீதான தற்காலிக பணியிடை நீக்க நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டுமென மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.