நெல் கொள்முதல் நிலையங்களில் விரைவாக பணம் வழங்க நடவடிக்கை: ஆட்சியரிடம் விவசாயிகள் மனு

நெல் கொள்முதல் நிலையங்களில் விரைவில் பணம் வழங்க வேண்டும் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம்
Updated on
1 min read

நெல் கொள்முதல் நிலையங்களில் விரைவில் பணம் வழங்க வேண்டும் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மகா சபையினர் கோரிக்கை விடுத்தனர்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது அகில இந்திய விவசாயிகள் மகா சபை செயலர் சேக் மைதீன், ஆட்சியர் ஷில்பாவிடம்  அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
ஓர் ஏக்கர் நிலத்தில் நெல் அறுவடை செய்ய இயந்திர வாடகை ரூ.3,500 செலவாகிறது. அறுவடை செய்யப்பட்ட நெல்லை வாகனத்தின் மூலம் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டுவர ரூ.3,000 செலவாகிறது. ஆனால், கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு உடனடியாகப் பணம் வழங்காமல் 10 முதல் 15 நாள்களுக்குப் பிறகு வங்கிக் கணக்கில் செலுத்துகிறார்கள். இதனால், அறுவடைச் செலவை ஈடுசெய்ய முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.
ஆனால், வியாபாரிகள் குறைந்த விலைக்கு விவசாயிகளிடம் இருந்து நெல் வாங்கி, கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டுசென்று விற்பனை செய்கின்றனர். வியாபாரிகளுக்கு சாதகமாக அதிகாரிகள் செயல்படுகின்றனர். வியாபாரிகளிடம் நெல் கொள்முதல் செய்வதை நிறுத்த வேண்டும். விவசாயிகளுக்கு ஓரிரு நாள்களில் நெல்லுக்கான பணத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நிலம் ஆக்கிரமிப்பு: நாரணம்மாள்புரம் பேரூராட்சி, அனந்தகிருஷ்ணாபுரம் கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள், ஆட்சியரிடம் அளித்த மனு: எங்கள் ஊரில் உள்ள பொதுப் பாதை சுமார் 50 ஆண்டுகளாக மக்கள் பயன்பாட்டில் உள்ளது. ஊராட்சி நிதியில் இருந்து அதில், நான்குமுறை தார்ச்சாலை போடப்பட்டுள்ளது. இந்நிலையில், தனிநபர் ஒருவர் அந்த இடத்தை தனக்குச் சொந்தமானது என்று உரிமை கோருகிறார். இதனால், இந்தப் பாதையை மாற்றம் செய்ய இருப்பதாக அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பாதையை பொதுமக்கள் தொடர்ந்து பயன்படுத்தும் வகையில் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகத் தீர்வு காண வேண்டும்.
பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர், வீரவநல்லூர் நகர பாஜக இளைஞரணித் தலைவர் சிவபாலன் ஆட்சியரிடம் அளித்த மனுவில், "வீரவநல்லூரில் ஏழை, எளியோருக்கு அரசால் வழங்கப்பட்ட இலவச பட்டா நிலத்தை, தனியார் பள்ளி ஆக்கிரமிப்பு செய்து வருகிறது. இந்த ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்' என கூறியுள்ளனர்.
ராமையன்பட்டி கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தி, அளித்த மனுவில், "ராமையன்பட்டியில் ஆதிதிராவிடர் சமுதாயத்துக்காக மயானத்துக்கு ஒன்றரை ஏக்கர் நிலம் ஆதிதிராவிடர் நலத் துறை மூலம் வழங்கப்பட்டது. அந்த இடத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்துள்ளார். மயானத்துக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்' என குறிப்பிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com