மக்களின் துயரங்களையும், நினைவுகளையும் கலைப் படைப்பாக்குவது எழுத்தாளர்களின் கடமை: எஸ்.ராமகிருஷ்ணன்

சமூகத்தில் சாதாரணமாக வாழும் மக்களின் துயரங்களையும், நினைவுகளையும் கலைப் படைப்புகளாக
Updated on
2 min read

சமூகத்தில் சாதாரணமாக வாழும் மக்களின் துயரங்களையும், நினைவுகளையும் கலைப் படைப்புகளாக மாற்றுவதே எழுத்தாளர்களின் கடமை என்றார் சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் திருநெல்வேலி சந்திப்பில் திங்கள்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவில் அவர் மேலும் பேசியது: நாகசுர கலைஞர் காருக்குறிச்சி அருணாசலம் உலகமறிந்த கலைஞர். இலங்கையில் அவரது இசைத்தொகுப்புகள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. கிடார் இசைக்கருவி வைத்திருந்தால் நாகரிகம் எனவும், நாகசுரத்துடன் வலம் வந்தால் மதிப்பு குறைவதாகவும் இளையதலைமுறையினர் நினைக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இசையின் மேன்மை தெரியவில்லை என்றே அர்த்தமாகும்.
கரிசல் நிலத்தில் ஏராளமான இசைக்கலைஞர்கள் வாழ்ந்து மறைந்துள்ளனர். ஜாதி, வறுமை போன்றவற்றால் திறமையிருந்தும் அங்கீகரிக்கப்படாத கலைஞர்கள் அதிகம். தென்மாவட்ட நாகசுர கலைஞர்கள் பசுவைப் போல சாதாரணமாக வாழ்ந்து தித்திக்கும் இசையை சமூகத்திற்கு கொடுத்தனர்.  மண்ணின் இசையை இயற்கை ஒலிக்கிறது. இசை மனிதர்களை ஒன்றிணைப்பதோடு, அரவணைக்கவும் செய்கிறது. நாகசுரம் சலிப்பை ஏற்படுத்தாத இசையைத் தரும். எவ்வளவு நேரம் கேட்டாலும் ரசிக்கத் தூண்டும் தன்மை கொண்டது. நாகசுர இசைக்கலைஞர்களின் வாழ்வியலை பற்றி எழுதிய சஞ்சாரம் நூலுக்கு சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தியாவில் உள்ள 24 மொழிகளில் அந்த நூல் மொழிபெயர்க்கப்படுவதன் மூலம் நாகசுர இசைக்கலைஞர்களின் வாழ்வியலை பிற மாநிலத்தவர்கள் அறியும் வாய்ப்பு உருவாகியுள்ளது. 
மனிதர்கள் எவரும் சாதாரணமானவர்கள் அல்ல. ஏனெனில் ஒவ்வொருவருக்குள்ளும் தனித்துவம் உள்ளது. அவரிடம் உள்ள அனுபவத்தை யாராலும் தட்டிப்பறித்துக் கொள்ள முடியாது. ஆனால், அவரது நினைவுகளை அழியாமல் பாதுகாக்க கலைப்படைப்புகளே உதவும். மனிதர்கள் துயரங்களை அதிகமாக சேமிக்கிறார்கள். சந்தோஷத்தை மறந்து விட்டு தவிக்கிறார்கள். வாழ்க்கைக்குத் தேவையான நிலம், நீர், காற்று உள்ளிட்டவற்றை இயற்கை இலவசமாகவே தருகிறது. அவரவர் வாழ்க்கையை ஒழுங்காக கழித்தாலே அது பெரிய சாதனையாகும். 
தமிழ் இலக்கியங்கள் வியப்பை அளிக்கும் வகையில் உள்ளன. 500 ஆண்டுகள் கடந்தாலே மொழி மற்றும் வாழ்க்கைச்சூழலில் மாற்றங்கள் இயல்பாக உருவாகிவிடும். ஆனால், 2 ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் இன்றைய காலத்திற்கும் ஏற்ற வகையில் உள்ள நூலாக திருக்குறள் திகழ்ந்து வருகிறது. காலத்தை வெல்லும் ஆற்றல் கலைப்படைப்புகளுக்கு மட்டுமே உண்டு. நம்மை ஆண்ட முன்னோர்கள் பாதுகாப்பை மட்டுமே காரணமாகக் கொண்டு கட்டிய கோட்டைகள் இன்று வீழ்ந்துவிட்டன. ஆனால், கலைநயத்தோடு உருவாக்கித் தந்து சென்ற சிற்பங்களும், கட்டடங்களும் நீடித்து நிலைத்து நிற்கின்றன. கலையால் மட்டுமே காலம் கடந்து நிற்கும் ஆற்றல் உள்ளது என்றார் அவர்.
விழாவில் நாகசுர கலைஞர் காருக்குறிச்சி அருணாசலத்தின் துணைவி ராமலட்சுமி அம்மாள் கெளரவிக்கப்பட்டார். எழுத்தாளர் இரா.நாறும்பூநாதன் தலைமை வகித்தார். வி.சண்முகம், கே.சந்திரபாபு, பாரதிக்கண்ணன், பிரேம மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவிஞர் கிருஷி வரவேற்றார். எழுத்தாளர் உதயசங்கர், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக தமிழியல் துறைத் தலைவர் அ.ராமசாமி, கோணங்கி, மருத்துவர் ராமானுஜம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். பொன்.ராஜகோபால் நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com