அதிகாரிகள் சமரசம்: மதுக்கடைக்கு எதிரான போராட்டம் ஒத்திவைப்பு
By DIN | Published On : 04th January 2019 07:30 AM | Last Updated : 04th January 2019 07:30 AM | அ+அ அ- |

மதுக்கடை 2 மாதத்தில் அப்புறப்படுத்தப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து சிவகிரி அருகே நடைபெற்று வந்த தொடர் போராட்டம் வியாழக்கிழமை ஒத்திவைக்கப்பட்டது.
ராயகிரி பேரூராட்சிக்குள்பட்ட வடுகபட்டி- தெற்குசத்திரம் பகுதியில் புதிதாக மதுக்கடை அக். 18 இல் திறக்கப்பட்டது. இந்த மதுக்கடையில் பொதுமக்கள், மாணவர்கள் குறிப்பாக பெண்கள் பாதிப்புக்கு ஆளாகியிருப்பதாக தெரிவித்து அக்கடையை மூட வேண்டும் என வலியுறுத்தி வடுகபட்டி, தெற்குசத்திரம், வடக்குசத்திரம் ஆகிய மூன்று கிராம மக்கள் டிச. 24 ஆம் தேதி முதல் காலவரையற்றப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
11 ஆவது நாளாக போராட்டம் வியாழக்கிழமையும் நீடித்தது. இதனிடையே, நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞர் பாசறை செயலர் இசை மதிவாணன் மற்றும் கிருஷ்ணகனி ஆகியோர் புதன்கிழமை முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கினர். கிராம மக்களும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், தென்காசி கோட்டாட்சியர் செளந்தரராஜன், சிவகிரி வட்டாட்சியர் எம். செல்வசுந்தரி, சங்கரன்கோவில் டி.எஸ்.பி. ராஜேந்திரன், காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார், அதிகாரிகள் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 2 மாதத்தில் மதுக்கடை அப்புறப்படுத்தப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து கிராம மக்கள் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவித்தனர். இதையடுத்து, காலவரையற்ற உண்ணாவிரதத்தை அதிகாரிகள் குளிர்பானம் வழங்கி முடித்து வைத்தனர்.