சுதேசி பொருள்களை ஒழிக்க மத்திய அரசு முயற்சி: த. வெள்ளையன் குற்றச்சாட்டு
By DIN | Published On : 04th January 2019 07:30 AM | Last Updated : 04th January 2019 07:30 AM | அ+அ அ- |

சுதேசி பொருள்களை ஒழித்துவிட்டு, அன்னிய பொருள்களை ஊக்குவிக்க மத்திய அரசு முயல்கிறது என்றார் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில தலைவர் த. வெள்ளையன்.
திருநெல்வேலியில் வியாழக்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் மேலும் கூறியது: இந்தியாவில் வெளிநாட்டுப் பொருள்களை அதிகளவில் பயன்படுத்துகின்றனர். அவைகள் தரமான பொருள்களா என வியாபாரிகளுக்கும், மக்களுக்கும் தெரியவில்லை.
வெளிநாட்டு குளிர் பானங்களால் சிறுநீரக பாதிப்பு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. எனினும், அதையும் வியாபாரிகள்
கொள்முதல் செய்து விற்பனை செய்கின்றனர். உடலுக்கு கேடு விளைவிக்கக் கூடிய மரபணு மாற்றம் செய்யப்பட்ட காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது. அதன் விதைகள் கூட முளைக்காத அளவுக்கு வெளிநாட்டில் மரபணு மாற்றம் செய்யப்பட்டு அனுப்பப்படுகிறது.
சோப், பவுடர் போன்ற வெளிநாட்டுப் பொருள்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியதாக இருந்தபோதிலும், அதை
விளம்பரங்கள் மூலம் எளிதாக மக்களிடையே கொண்டு சேர்க்கப்படுகிறது. உள்நாட்டு பொருள்களை ஒட்டுமொத்தமாக ஒழித்துவிட்டு அன்னிய நாட்டுப் பொருள்களை ஊக்குவிக்க மத்திய அரசு முயல்கிறது.
அன்னிய நாட்டுப் பொருள்களை ஆதரித்து காங்கிரஸ் அரசு கதவை திறந்துவிட்டது. ஆனால் பாஜக அரசு அந்த கதவையே முற்றிலுமாக அகற்றிவிட்டது. ஆன்லைன் வர்த்தகம் மூலம் நூதனமாக நுகர்வோர்கள் சுரண்டப்படுகின்றனர். மக்கள் மத்தியில் சுதேசி பொருள்கள் மீதான ஆர்வத்தை தூண்டும் வகையில் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படும்.
புத்தாண்டு முதல் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டுப் பொருள்கள் மீது ஒட்டியிருக்கும் பிளாஸ்டிக் பொருள்களை அரசு மறைமுகமாக ஆதரிக்கிறது. அதேநேரத்தில் உள்நாட்டுப் பொருள்களை பிளாஸ்டிக் பைகளில் அடைத்தால், அதை பறிமுதல் செய்கின்றனர்.
பிளாஸ்டிக் தடை விவகாரத்தைப் பொறுத்தவரையில் அன்னிய பொருள்களுக்கு ஒரு விதி, உள் நாட்டுப் பொருள்களுக்கு ஒரு விதி என பாகுபாடு காட்டக்கூடாது. மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்கக்கூடாது என்றார்
அவர். முன்னதாக பாளையங்கோட்டையில் வெள்ளையன் தலைமையில் சுதேசி பொருள்கள் குறித்த விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.