மாநகராட்சிக்கு வரி நிலுவை: 7 குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு
By DIN | Published On : 04th January 2019 07:33 AM | Last Updated : 04th January 2019 07:33 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாநகராட்சியில் வரிகள் மற்றும் கட்டணத்தை முறையாகச் செலுத்தாத 7 குடிநீர் இணைப்புகள் வியாழக்கிழமை துண்டிக்கப்பட்டன.
இதுதொடர்பாக திருநெல்வேலி மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருநெல்வேலி மாநகராட்சியில் 2018-19 ஆம் ஆண்டுக்கான தீவிர வரி வசூல் பணி நடைபெற்றுவருகிறது. அதன்படி சொத்துவரி உள்ளிட்ட வரியினங்கள், குடிநீர்க் கட்டணங்களைச் செலுத்தாத குடியிருப்புகளின் குடிநீர் இணைப்புகளைத் துண்டிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, பாளையங்கோட்டை மண்டலம், 13 ஆவதுவார்டில் 2013-14 ஆம் ஆண்டு முதல் குடிநீர்க் கட்டணம் செலுத்தாமல் இருந்த திருச்செந்தூர் சாலையில் உள்ள ஒரு வணிக வளாகம், மேலப்பாளையம் மண்டலம் 26 ஆவது வார்டுக்குள்பட்ட தென்றல்நகர், திருமால்நகர் ஆகிய குடியிருப்புகளில் தலா ஒரு கட்டடம், திருநெல்வேலி மண்டலம் 40 ஆவது வார்டு பாரதியார்தெரு, 42 ஆவது வார்டில் உள்ள பெருமாள்கீழரதவீதி உள்ளிட்ட பகுதிகளில் 3 கட்டடங்கள் என 7 குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.
எனவே, மாநகராட்சியின் நடவடிக்கையைத் தவிர்க்க வரியினங்கள் மற்றும் கட்டணங்களை முறையாகச் செலுத்த வேண்டுமென மாநகராட்சி ஆணையர் (பொ) நாராயணன் நாயர் அறிவுறுத்தியுள்ளார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.