மீன்கள் பறிமுதல்: மேலப்பாளையத்தில் வியாபாரிகள் தர்னா
By DIN | Published On : 04th January 2019 07:29 AM | Last Updated : 04th January 2019 07:29 AM | அ+அ அ- |

திருநெல்வேலியில் சாலையோர கடைகளில் தரை வாடகை வசூலித்துக்கொண்டு, மீன்களை பறிமுதல் செய்ததாக, மாநகராட்சி அதிகாரிகளைக் கண்டித்து வியாபாரிகள் வியாழக்கிழமை தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி மாநகராட்சி, மேலப்பாளையம் மண்டலத்தில் உள்ள ராஜராஜேஸ்வரிநகர், திருவனந்தபுரம் சாலை, அம்பாசமுத்திரம் சாலை, நேதாஜி சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரம் பலர் மீன் வியாபாரம் செய்து வருகிறார்கள். இவர்களிடம் மாநகராட்சி சார்பில் தினமும் தரைவாடகை என்ற பெயரில் ரசீது வழங்கி கட்டணம் வசூலிக்கபடுகிறதாம்.
இந்நிலையில் வியாழக்கிழமை காலையில் மாநகராட்சி ஊழியர்கள் கட்டணம் வசூலித்தனராம். சிறிது நேரத்தில் அங்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள், போக்குவரத்துக்கு இடையூறாக கடை நடத்தக்கூடாது எனக் கூறி மீன்களை பறிமுதல் செய்தனர். 7 கடைகளில் சுமார் 100 கிலோ மீன்களையும், தளவாடப் பொருள்களையும் பறிமுதல் செய்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கு ஆட்சேபம் தெரிவித்து, மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தை மீன்வியாபாரிகள் முற்றுகையிட்டனர். வியாபாரிகளுக்கு ஆதரவாக எஸ்டிடியூ தொழிற்சங்கத்தின் கிழக்கு மாவட்டச்செயலர் ஐ.பஷீர்லால் மற்றும் நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை, மேலப்பாளையம் போலீஸார் சமாதானப்படுத்தினர்.
இதுகுறித்து வியாபாரிகள் கூறியது: மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் சாலையோரம் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மீன் விற்பனை செய்து வருகிறோம். இதற்காக கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட கடற்கரைப் பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட ரக மீன்களை கொண்டுவருகிறோம். எங்களால் மக்களுக்கு இடையூறு ஏற்பட்டதில்லை.
அதேவேளையில், தரைவாடகை என்ற பெயரில் மாநகராட்சி சார்பில் ரசீது கொடுத்து, மீன்களின் எடைக்கு ஏற்ப கிலோ ஒன்றுக்கு ரூ.2 வீதம் எங்களிடம் கட்டணம் வசூலிக்கிறார்கள். வியாழக்கிழமையும் கட்டணத்தை வசூலித்துக் கொண்ட அதிகாரிகள், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீரென கடைக்கு வந்து மீன்களையும், பொருள்களையும் பறிமுதல் செய்தனர். இதனால் 50-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளோம். பல ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மீன்களும் அழுகும் நிலை உருவாகியுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் அடுத்தக்கட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.
மாநகராட்சி வட்டாரத்தில் கேட்டபோது, தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்க திட்டத்தின் கீழ் பதிவு செய்தவர்கள் மட்டுமே சாலையோர வியாபாரிகளாக கடைகளை நடத்த முடியும். அதுதவிர, பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறாகவோ, சுகாதாரக்கேடு விளைவிக்கும் வகையிலோ மீன்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்யக்கூடாது. விதிமீறல் இருந்ததால் மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றனர்.