நெல்லையில் ஏஐடியூசி சிறப்புப் பேரவைக் கூட்டம்
By DIN | Published On : 07th January 2019 08:30 AM | Last Updated : 07th January 2019 08:30 AM | அ+அ அ- |

திருநெல்வேலி நகரத்தில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஏஐடியூசி சார்பில் சிறப்புப் பேரவைக் கூட்டம் நடைபெற்றது.
சங்கத் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். சித்தநாதன், நீராவி, ராஜமுத்து, கல்யாண சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைப் பொதுச் செயலர் சுடலைமுத்து வரவேற்றார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் காசிவிஸ்நாதன், ஏஐடியூசி பொதுச் செயலர் சடையப்பன், ஏ.ஐ.பி.இ.ஏ. மாவட்டச் செயலர் ரெங்கன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
சம்மேளனப் பொதுச்செயலர் லட்சுமணன், ஓய்வுபெற்றோர் மாநில சம்மேளனத் தலைவர் ஆறுமுகம் ஆகியோர் பேசினர். ராஜேந்திரன், மணிகண்டன், சுப்பையா, ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். சேமநல ஓட்டுநர், நடத்துநர் என்பதைக் கைவிட்டு நியமித்த 240 நாள்களில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 1.4.2003-க்குப் பின்பு பணியில் சேர்ந்தோரையும் ஓய்வூதியத் திட்டத்தில் இணைக்க வேண்டும். போக்குவரத்துக் கழகங்களில் வரவு-செலவு பற்றாக்குறையை முழுமையாக அரசு வழங்க வேண்டும். நடத்துநர் இல்லாத அரசுப் பேருந்துகள் இயக்குவதை நிறுத்த வேண்டும். அனைத்துப் பிரிவுகளிலும் தேவைக்கேற்ப பணியாளர்களை நியமிக்க வேண்டும். வாரிசுப் பணி வேண்டி பதிவு செய்து 15 ஆண்டுகளாக காத்திருக்கும் குடும்பங்களைச் சேர்ந்தோருக்கு வாரிசுப் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப் பட்டன.