வருங்காலத்தை நினைத்து மாணவர்கள் செயல்பட வேண்டும்: மு.க.ஸ்டாலின்
By DIN | Published On : 07th January 2019 08:27 AM | Last Updated : 07th January 2019 08:27 AM | அ+அ அ- |

வருங்காலத்தை மனதில்கொண்டு மாணவர்கள் செயல்பட வேண்டும் என்றார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
திமுக இளைஞரணி அறக்கட்டளை சார்பில், அண்ணாவின் 110ஆவது பிறந்த தினத்தையொட்டி நடத்தப்பட்ட மாநில அளவிலான பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதை ஒப்பித்தல் போட்டி உள்ளிட்ட போட்டிகளில் வென்ற மாணவர்களுக்குப் பரிசளிப்பு விழா திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநில இளைஞரணிச் செயலர் வெள்ளக்கோவில் சாமிநாதன் தலைமை வகித்தார். விழாவில், மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
அண்ணா, கருணாநிதி பிறந்த நாளையொட்டி இதுவரை 21,003 மாணவர்களுக்கு ரூ.7,40,25,500 ரொக்கப் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது. இன்று திமுக தலைவர் பொறுப்பில் இருந்தாலும், என்னுடைய வளர்ச்சி என்பது திடீரென்று வரவில்லை. படிப்படியாக வளர்ந்து வந்திருக்கிறேன். இந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறேன் என்றால் நான் திமுக இளைஞரணியில் இருந்ததுதான் காரணம். வளர்ச்சி என்பது படிப்படியாகத்தான் இருக்க வேண்டும். திமுகவில் பல அமைப்புகள் உள்ளன. அதில் முதல் இடத்தில் இருப்பது இளைஞரணி.
மாணவர்கள் அரசியல் பேச வேண்டியது அவசியமல்ல. ஆனால், மாணவர்கள் மத்தியில் அரசியல் பேசாமல் போனால் அது சரியாக இருக்காது. நாட்டில் உள்ள சூழல்களையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆட்சியின் தன்மையை தெரிந்துகொண்டு, வரும் காலகட்டத்தில் நாம் எந்த நிலையில் இருந்திட வேண்டும் என்பதை மனதில் வைத்து அதற்கேற்ப மாணவர்கள் செயல்பட வேண்டும் என்றார் அவர்.
இதைத் தொடர்ந்து, ஸ்டாலினுக்கு அய்யாத்துரைப்பாண்டியன் நினைவுப் பரிசாக வெள்ளி செங்கோல் வழங்கினார். நிகழ்ச்சியில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இளைஞரணி துணைச் செயலர்கள் ஜோயல், துரை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை அய்யாத்துரைப்பாண்டியன், மேற்கு மாவட்டச் செயலர் சிவ.பத்மநாதன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.