நெல்லையில் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை திறப்பு

திருநெல்வேலியில் ரூ.150 கோடியில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை பிரதமர் நரேந்திர மோடி, மதுரையில் ஞாயிற்றுக்கிழமை
Updated on
2 min read


திருநெல்வேலியில் ரூ.150 கோடியில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை பிரதமர் நரேந்திர மோடி, மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் திறந்து வைத்தார். அதன்பின்பு திருநெல்வேலியில் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றினர்.
பிரதமரின் சுவஸ்திய சுரக்ஷா யோஜனா திட்டம்-3 இன் கீழ் மத்திய அரசு சார்பில் ரூ.120 கோடி, மாநில அரசு சார்பில் ரூ.30 கோடி என மொத்தம் ரூ.150 கோடியில் திருநெல்வேலியில் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி கடந்த 22-6-2016 ஆம் தேதி இம் மருத்துவமனைக்கான பணிகள் தொடங்கப்பட்டன. 8 தளங்களுடன் 20 ஆயிரத்து 64 சதுர அடியில் கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
இம் மருத்துவமனையை பிரதமர் நரேந்திர மோடி, மதுரையில் நடைபெற்ற விழாவில் திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து திருநெல்வேலியில் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், மாநிலங்களவை உறுப்பினர் விஜிலா சத்தியானந்த், திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினரும், அதிமுக புறநகர் மாவட்டச் செயலருமான கே.ஆர்.பி.பிரபாகரன் உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றினர். தமிழக அரசின் கூடுதல் செயலரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான ராஜேந்திரகுமார், சட்டப்
பேரவை உறுப்பினர்கள் இன்பதுரை (ராதாபுரம்), மனோகரன் (வாசுதேவநல்லூர்), மாவட்ட வருவாய் அலுவலர் பூ.முத்துராமலிங்கம், மருத்துவக் கல்லூரி முதல்வர் எஸ்.எம்.கண்ணன், துணை முதல்வர் ரேவதிபாலன், கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன், பொறுப்பு அலுவலர் சாந்தாராம், திருநெல்வேலி கோட்டாட்சியர் மணீஷ் நாரணவரே, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆ.பழனி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து மருத்துவமனை வட்டாரங்கள் கூறியது: புதிய மருத்துவமனையில் மொத்தம் 330 படுக்கை வசதிகள் உள்ளன. 280 படுக்கைகள் உள்நோயாளிகள் பிரிவுக்கும், 50 படுக்கைகள் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. 7 அதிநவீன அறுவைச் சிகிச்சை அரங்குகள், கதிரியக்கப் பிரிவு, மைய கிருமி நீக்கும் துறை, பத்து மின்தூக்கி உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இங்கு 68 பல்நோக்கு சிறப்பு மருத்துவர்கள், 168 செவிலியர்கள், 250 இதர பணியாளர்கள் என புதிதாக 483 பணியிடங்களுக்கு தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. இதுதவிர 2,000 பேருக்கு மறைமுகமாக வேலைவாய்ப்பு கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன என்றனர்.
சிறுநீரக, இதய நோயாளிகளுக்கு வரப்பிரசாதம்புதிய மருத்துவமனையில் 4 மருத்துவம் சார்ந்த சிறப்புத் துறைகளான நரம்பியல், இதயவியல், சிறுநீரகவியல், இரைப்பை மற்றும் குடலியல் பிரிவுகளும், அறுவைச் சிகிச்சை சார்ந்த சிறப்புத் துறைகளான இதய அறுவைச் சிகிச்சை, பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை, சிறுநீரக அறுவைச் சிகிச்சை, இரைப்பை மற்றும் குடல் அறுவைச் சிகிச்சை பிரிவுகளும் செயல்பட உள்ளன. இதுதவிர மயக்கவியல், கதிரியக்கவியல், நோய்க் குறியியல், நுண்ணுயிரியல், உயிர் வேதியியல், உதிர மாற்று மருத்துவத் துறை ஆகிய 6 துணை மருத்துவத் துறைகளின் கீழும் சேவைகள் அளிக்கப்பட உள்ளன. அறுவைச் சிகிச்சை அரங்கமானது இனி வாரத்தில் 4 முதல் 6 நாள்கள் செயல்பட உள்ளதால் உள்நோயாளிகளின் சேர்க்கை அதிகரிக்கும். சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைகளின் எண்ணிக்கை உயரும்.
இதய பைபாஸ் அறுவைச் சிகிச்சை, கல்லீரல் மற்றும் இதய மாற்று அறுவைச் சிகிச்சை, புற்றுநோய் அறுவைச் சிகிச்சை ஆகியவை திருநெல்வேலியிலேயே செய்யும் வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளதால் தென்தமிழக நோயாளிகள் பயன் பெறுவார்கள் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com