தென்காசியில் தொழிலாளி சாவில் மர்மம் இருப்பதாக கூறி உடலை வாங்க மறுத்து போராட்டம்
By DIN | Published On : 03rd July 2019 08:08 AM | Last Updated : 03rd July 2019 08:08 AM | அ+அ அ- |

தென்காசியில் கூலித் தொழிலாளி உயிரிழப்பில் மர்மம் இருப்பதாகக் கூறி, உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.
பாவூர்சத்திரம் அருகே ஆரியங்காவூர் அம்மன் கோயில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் செ.சுடலையாண்டி (35). கட்டடத் தொழிலாளியான இவர், கடந்த திங்கள்கிழமை தென்காசி ஊராட்சி ஒன்றிய அலுவலகப் பகுதியில் வேலை செய்து கொண்டிருந்தாராம்.
அப்போது திடீரென மயங்கி கீழே விழுந்ததையடுத்து, அவருடன் பணிபுரிந்தவர்கள் அவரை மீட்டு வீட்டில் கொண்டு இறக்கிவிட்டு வந்துள்ளனர். ஆனால் நீண்டநேரமாகியும் அவர் எழவில்லையாம். இதையடுத்து அவருடைய உறவினர்கள் தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தென்காசி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை பிரேத பரிசோதனைக்குப் பின்னர், சுடலையாண்டியின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி, உடலை வாங்க மறுத்து அவருடைய உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த காவல் ஆய்வாளர் ஆடிவேல் தலைமையிலான போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.பிரேத பரிசோதனை அறிக்கையின்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் கூறியதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுடலையாண்டியின் உடலை பெற்றுக்கொண்டு கலைந்து சென்றனர்.