மாற்றுத் திறனாளிகள் குறைதீர் கூட்டம்
By DIN | Published On : 03rd July 2019 08:05 AM | Last Updated : 03rd July 2019 08:05 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் நாள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்துகொண்டு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
பின்னர் ஆட்சியர் பேசியது: தமிழ்நாடு அரசு மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு நலத் திட்டங்கள் மற்றும் அவர்களது வாழ்க்கை தரத்தை முன்னேற்ற தேவையான திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகிறது. அலுவலர்கள் கோரிக்கை மனுக்களை கனிவுடன் பரிசீலனை செய்து விரைவாக தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளித்து அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதில் அக்கறை காட்ட வேண்டும் என்றார் அவர்.
முன்னதாக ரூ.75 ஆயிரம் மதிப்பில் மோட்டார் பொருத்திய நான்கு சக்கர சைக்கிள் ஒருவருக்கும், கல்லூரி மாணவி ஒருவருக்கு செவித்திறன் கருவியையும் ஆட்சியர் வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் பூ.முத்துராமலிங்கம், மாற்றுத் திறனாளி நல அலுவலர் சாந்தி குளோரி எமரால்டு, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணைஆட்சியர் சுகி பிரேமலா, மாற்றுத் திறனாளி அலுவலர்கள் பிரபாகரன், சுப்பிரமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.