முன்னறிவிப்பின்றி குழாய் பதிக்கும் பணி: செங்கோட்டையில் போக்குவரத்து மாற்றம்: பொதுமக்கள் அவதி
By DIN | Published On : 09th June 2019 01:25 AM | Last Updated : 09th June 2019 01:25 AM | அ+அ அ- |

செங்கோட்டையில் முன்னறிவிப்பின்றி தாமிரவருணி கூட்டுக் குடிநீர்த் திட்ட குழாய் பதிக்கும் பணிக்காக 2 நாள்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சனிக்கிழமை அவதியடைந்தனர்.
செங்கோட்டை குண்டாற்று பகுதியில் புதிய பாலம் அமைக்கப்பட உள்ளதால் அந்த வழியாக 20- க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் செல்லும் தாமிரவருணி கூட்டுக் குடிநீர்த் திட்ட குழாயை மாற்றி அமைக்கும் பணி 2 நாள்கள் நடைபெறுகிறது.
இந்நிலையில், குடிநீர் வடிகால் வாரியத்தினர் சனிக்கிழமை காலை செங்கோட்டை பிரானுர் பார்டர் பகுதியிலுள்ள குண்டாற்று பாலத்தை ஒட்டியுள்ள பகுதியில் கொல்லம் சாலை வனத்துறை பகுதி, பிரானுர் பார்டர் சவுக்கை முக்கு, கணக்குபிள்ளை வலசை உள்ளிட்ட பகுதிகளில் சாலை மாற்றம் குறித்த அறிவிப்பு பதாகைகளை வைத்தனர். பின்னர் குண்டாற்று பால சாலையின் இருபகுதிகளிலும் சுமார் 2 மீட்டர் அளவுக்கு பள்ளம் தோண்டும் பணியை தொடங்கினர். தூத்துக்குடி, திருநெல்வேலி , தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து செங்கோட்டை பிரானுர் பார்டர் வழியாக கேரளம் செல்லும் வாகனங்கள் மாற்றுபாதையான இலஞ்சி, கணக்கப்பிள்ளை வலசை வழியாக செங்கோட்டை நகருக்குள் வந்து செல்லும் வகையிலும், கேரளத்தில் இருந்து செங்கோட்டை வழியாக வெளியூர் செல்லும் வாகனங்கள் விஸ்வநாதபுரம், பண்பொழி, கணக்கப் பிள்ளை வலசை வழியாக செல்ல அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டது.
இந்நிலையில் எந்தவித முன்னறிவிப்பின்றி திடீரென போக்குவரத்து மாற்றம் குறித்து அறிவிப்பு பதாகையை வைத்து, குழாய் மாற்றி அமைக்கும் பணியை மேற்கொண்டதால் அப்பகுதியில் போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்பட்டது. குடிநீர் வடிகால் வாரியத்தினர் தேசிய நெடுஞ்சாலைதுறையினரிடம் அனுமதி பெற்று பணி தொடங்கினாலும், எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் இந்தப் பணி தொடங்கப்பட்டதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்தப் பணி 2 அல்லது 3 நாள்கள் நீடிக்கும் என கூறப்படுகிறது. பொதுமக்கள், வாகன ஓட்டுநர்களின் நலன் கருதி இந்தப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.