வி.எம்.சத்திரத்தில் 50 ஆண்டுகளாக தூர்வாரப்படாத பாசனக் குளங்கள்!: கழிவுகளின் கேந்திரமாகும் அவலம்

திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட வி.எம்.சத்திரத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாமல் உள்ள குளங்களால்


திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட வி.எம்.சத்திரத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாமல் உள்ள குளங்களால் நிலத்தடி நீர்மட்டம் மிகவும் குறைந்துள்ளது. கட்டடக் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகளின் கேந்திரமாக இவை மாறி வருவதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கிறார்கள்.
திருநெல்வேலி மாநகராட்சியின் 18 ஆவது வார்டில் வி.எம்.சத்திரம் உள்ளது. இங்கு, நொச்சிக்குளம், மூர்த்திநயினார்குளம், பீர்க்கன்குளம் ஆகிய மானாவாரி பாசனக் குளங்கள்  உள்ளன. விவசாயம், நிலத்தடி நீர் ஆதாரமாக இந்தக் குளங்கள் விளங்கி வந்தன. மதுரை-கன்னியாகுமரி நான்குவழிச்சாலை உருவான பிறகு வி.எம்.சத்திரம் மாநகரின் மிக முக்கிய பகுதிகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இங்கு குடியிருப்புகளின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துள்ளது. இப்போது சுமார் 6 ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இப் பகுதி மக்களின் நிலத்தடி நீராதாரமாகத் திகழும் குளங்கள் அனைத்தும் தூர்வாரப்படாமல் உள்ளன. இதுதவிர கழிவுகளின் கேந்திரமாக மாறிவிட்டதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கிறார்கள்.
50 ஆண்டுகளாக தூர்வாரவில்லை: இதுகுறித்து வி.எம்.சத்திரம் ஊர் நாட்டாண்மை ஆறுமுகம் கூறியது: வி.எம்.சத்திரத்தில் உள்ள குளத்தை நம்பி சுமார் 40 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெற்று வந்தன. கத்தரி, வெண்டை, தடியங்காய் உள்ளிட்ட பூம்பயிர்களும், நெல், வாழையும் பயிரிடப்பட்டு வந்தன. மானாவாரி குளம் என்பதால் நீர்வரத்துக் கால்வாய்களை நம்பிதான் குளம் பெருகும். ஆனால், குடியிருப்புகள் பெருக பெருக ஓடைகள் அனைத்தும் தூர்ந்து போய்விட்டன. கடந்த 50 ஆண்டுகளாக இந்தக் குளங்கள் தூர்வாரப்படாமல் கிடப்பதால் நீர்மட்டம் குறைந்துவிட்டது. குளத்தின் கரைகளும் சேதமாகிவிட்டன. எங்கள் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை கால்நடை வளர்ப்பு பிரதானமாக இருந்தது. வீட்டுக்கு வீடு பசு, எருமை மாடுகள், ஆடுகள் வளர்க்கப்பட்டு வந்தன. இப்போது குடிநீர்த் தட்டுப்பாடு, தீவனப் பற்றாக்குறை காரணமாக கால்நடை வளர்ப்பு மிகவும் குறைந்துவிட்டது. ஆகவே, எங்கள் பகுதியில் உள்ள குளங்களை பருவமழைக்கு முன்பாகத் தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
அபாய நிலையில் நிலத்தடி நீர்மட்டம்: இதுகுறித்து வி.எம்.சத்திரத்தைச் சேர்ந்த முத்துப்பட்டன் கூறியது: நொச்சிக்குளம், மூர்த்திநயினார்குளம், பீர்க்கன்குளம் ஆகியவற்றால்தான் வி.எம்.சத்திரம், சீனிவாசநகர், கே.டி.சி.நகர் தென்பகுதி, ஹவுசிங் போர்டு காலனி, முதலாளிநகர் உள்ளிட்ட பகுதிகளின் நிலத்தடி நீர்மட்டம் ஓரளவு தாக்குப்பிடித்து வருகிறது. குளங்களை முறையாக பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் ஆண்டுதோறும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. முன்பு சுமார் 30 அடியில் நிலத்தடி நீர் கிடைத்து வந்த நிலையில் இப்போது சுமார் 125 அடியை தாண்டினால் மட்டுமே ஈரப்பதமான மண் வருகிறது. மூன்று குளங்களின் கரைகள் சீரமைக்கப்படாததாலும், நீர்வரத்து ஓடைகள் அனைத்தும் பிளாஸ்டிக் கழிவுகளால் அடைபட்டு கிடப்பதாலும் மழைக்காலங்களில் தண்ணீர் செல்ல வழியின்றி குடியிருப்புகளில் புகுவதும், கோடைக் காலங்களில் கடும் வறட்சி நிலவுவதும் தொடர்கதையாகி வருகிறது. இதுதவிர நான்குவழிச் சாலையோரம் குளம் உள்ளதால் இரவு நேரங்களில் பிற பகுதிகளில் இருந்து லாரிகளில் கட்டடக் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகளையும் மர்மநபர்கள் கொட்டிச்செல்கிறார்கள். குளத்தைத் தூர்வாரி பராமரிக்க  ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் எங்கள் பகுதியின் நீராதாரத்தைக் காக்க உடனடியாக வி.எம்.சத்திரம் பகுதி குளங்களைத் தூர்வார மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
அதிகாரி பதில்: இதுகுறித்து திருநெல்வேலி மாநகராட்சியின் பாளையங்கோட்டை மண்டல உதவி ஆணையர் வி.சந்தியா கூறியது: இந்த மண்டலத்தின் கீழ் உள்ள மானாவாரி, பாசனக் குளங்கள் ஆகியவை பொதுப்பணித்துறை மற்றும் ஊராட்சி ஒன்றியங்களின் கீழ் வருகின்றன. அதனால் அங்கு மேம்பாட்டுப் பணிகளை மாநகராட்சி நிதியில் இருந்து நேரடியாக செய்வதில் சில சிக்கல்கள் உள்ளன. வி.எம்.சத்திரத்தில் உள்ள 3 குளங்களும் ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் வருகின்றன. அதன் மூலம் மாநகராட்சி பகுதிகளின் நிலத்தடி நீர்மட்டம் பெருகும் என மக்கள் தெரிவித்துள்ளதால், மாநகராட்சி சார்பில் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கு தூர்வார பரிந்துரைக்கப்படும். மேலும், தேவையான உதவிகளை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். நீராதாரங்களைப் பாதுகாப்பதில் பொதுமக்களின் பங்களிப்பும் அவசியம். குளங்கள், ஓடைகள் ஆகியவற்றில் குப்பைகளைக் கொட்டுவதைத் தவிர்க்க வேண்டும் என்றார் அவர்.
குளத்திற்குள் எரிக்கப்படும் குப்பைகள்!
வி.எம்.சத்திரம் பகுதியில் குப்பைகள் சேகரிப்பில் மாநகராட்சி ஊழியர்கள் மிகவும் மெத்தனம் காட்டுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள். பாதாள சாக்கடை திட்டமும் இல்லாததால் கழிவுநீர் அனைத்தும் குளங்களில் தேங்குகின்றன. இதனால் கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. இதுதவிர இப்பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை மாநகராட்சி பணியாளர்கள் பீர்க்கன்குளத்தில் குவித்து வைத்து தீ வைத்து விடுகிறார்கள். பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்டவை எரிந்து நச்சுப்புகை வெளியேறுவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. ஆகவே, புதைச் சாக்கடை திட்டத்தை விரைந்து செயல்படுத்தவும், குப்பைகளை முறையாக சேகரித்து ராமையன்பட்டிக்கு கொண்டு செல்லவும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com