களக்காட்டில் பயணிகள் நிழற்குடை: மக்கள் நீதி மய்யம் கோரிக்கை
By DIN | Published On : 14th June 2019 07:06 AM | Last Updated : 14th June 2019 07:06 AM | அ+அ அ- |

களக்காடு அண்ணாசாலையில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
அக்கட்சியின் களக்காடு நகரப் பொறுப்பாளர் எஸ். அழகியநம்பி, ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு: களக்காட்டில் அண்ணாசிலை அமைந்துள்ள பகுதி நகரின் மையப் பகுதியாகும். நகரின் பழைய பேருந்து நிறுத்தமான இங்கு பயணிகள் வசதிக்காக நிழற்குடை, குடிநீர் வசதி போன்றவை இல்லை.
இங்குள்ள கழிப்பறை பராமரிப்பின்றி சுகாதார சீர்கேடுகளால் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. அண்ணாசிலைக்கு வடபுறத்தில் பவுண்டு (மாடுகளை அடைக்கும் கட்டடம்) பல ஆண்டுகளாக புதர் மண்டி காணப்படுகிறது. மையப் பகுதியில் அமைந்துள்ள இங்கு அரசு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
ஆகவே, இங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். பயணிகள் நிழற்குடை அமைக்கவும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி, கழிப்பிடத்தை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வியாசராஜபுரம் முப்பிடாதி அம்மன் கோயில் அருகில் அமைக்கப்பட்டுள்ள சிறுமின்விசை குடிநீர் பழுதடைந்து மக்களுக்கு பயன்படவில்லை. தற்போது நிலவு குடிநீர் பிரச்னையை தீர்க்கும் வகையில் இந் குடிநீர் தொட்டியை செயல்படுத்தவும் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.