சங்கரன்கோவில், சிவகிரியில் மார்க்சிஸ்ட் மறியல்:44 பேர் கைது
By DIN | Published On : 14th June 2019 07:03 AM | Last Updated : 14th June 2019 07:03 AM | அ+அ அ- |

திருநெல்வேலியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டப் பொருளாளர் அசோக் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, சங்கரன்கோவில், சிவகிரியில் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 44 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சங்கரன்கோவிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாகப் புறப்பட்ட சி.ஐ.டி.யூ. மாவட்டத் தலைவர் ஏ.மாடசாமி, மார்க்சிஸ்ட் வட்டாரச் செயலர் அசோக்ராஜ், மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் உ.முத்துப்பாண்டியன் உள்ளிட்டோர், பேருந்து நிலையம் முன் பிரதான சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால், அங்கு சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்ளிட்ட 21 பேரை நகர காவல்நிலைய ஆய்வாளர் கண்ணன் தலைமையிலான போலீஸார் கைது செய்தனர்.
சிவகிரியில் பழைய காவல் நிலையப் பேருந்து நிறுத்தம் முன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலர் இரா. நடராசன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட மாவட்டக் குழு உறுப்பினர் பி. நடராஜன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் எம். ராமசுப்பு, எம். மருதையா, வே. சுப்பிரமணியன், அ. பேச்சியம்மாள் உள்பட 23 பேரை சிவகிரி காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார் கைது செய்தார்.