சங்கரன்கோவில் திரெளபதியம்மன் கோயிலில் இன்று பூக்குழி திருவிழா
By DIN | Published On : 14th June 2019 07:07 AM | Last Updated : 14th June 2019 07:07 AM | அ+அ அ- |

சங்கரன்கோவில் திரெளபதியம்மன் கோயிலில் பூக்குழித் திருவிழா வெள்ளிக்கிழமை (ஜூன் 14) நடைபெறுகிறது.
சங்கரன்கோவில் செங்குந்தர் சமுதாயத்திற்குப் பாத்தியப்பட்ட திரெளபதியம்மன் கோயிலில் பூக்குழித் திருவிழா கடந்த 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதைத்தொடர்ந்து சக்திகும்பம் எடுத்தல்,திருமுறைப் பாராயணம், ஐந்தாம் கிரகம்,சுவாமி,அம்பாள் காட்சி கொடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 7 ஆம் திருநாளான செவ்வாய்க்கிழமை மாலை திருவிளக்குப் பூஜை நடைபெற்றது. தொடர்ந்து அர்ச்சுணன் தவக்கோலத்துடன் வந்து பாசுபதாஸ்திரம் பெறுதல் நிகழ்ச்சியும்,வியாழக்கிழமை திரெளபதியம்மன் கூந்தல் முடிப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றன. 10 ஆம் திருநாளான வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு சக்தி நிறுத்துதல் மற்றும் அக்னிவளர்த்தல் நடைபெறுகிறது. மாலை 4 மணியளவில் சுவாமி- அம்பாள் கரக ஆட்டத்துடன் வீதியுலா வந்து பூக்குழி நடைபெறும் இடத்திற்கு வருகின்றனர். அங்கு 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்குகின்றனர்.
பரிசளிப்பு: முன்னதாக, பூக்குழி விழாவையொட்டி, சாரதிராம் அறக்கட்டளை சார்பில் 10ஆம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ- மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அகில பாரத ஐயப்பா சேவா சங்கத் தலைவர் என்.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். செங்குந்தர் அபிவிருத்தி சங்கத் தலைவர் ச.ராமசுப்பு முன்னிலை வகித்தார். காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜேந்திரன், சாரதிராம் அறக்கட்டளை நிறுவனர் பி.ஜி.பிராமநாதன் உள்ளிட்டோர் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கினர். மாஸ்டர் வீவர்ஸ் தலைவர் என்.கே.எஸ்.டி.சுப்பிரமணியன்,செங்குந்தர் அபிவிருத்தி சங்கச் செயலர் எம்.ஏ.சங்கரமகாலிங்கம்,ஆ.தில்லையம்பலம்,ஆ.பழனியாண்டி,பூக்குழி இறங்கும் பக்தர்கள் பேரவைத் தலைவர் ஏ.எஸ்.முப்பிடாதி,பா.குப்பையாண்டி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.