பிளஸ்-1 பொதுத் தேர்வு இன்று தொடக்கம்: நெல்லை மாவட்டத்தில் 36,510 மாணவர்கள் எழுதுகின்றனர்
By DIN | Published On : 06th March 2019 09:04 AM | Last Updated : 06th March 2019 09:04 AM | அ+அ அ- |

தமிழகத்தில் பிளஸ்-1 தேர்வுகள் புதன்கிழமை (மார்ச் 6) தொடங்க உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் 36 ஆயிரத்து 510 மாணவர்-மாணவிகள் தேர்வை எழுத உள்ளனர்.
தமிழகத்தில் பிளஸ்-2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளைப் போல பிளஸ்-1 மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு கடந்த ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, நிகழாண்டுக்கான தேர்வு தமிழகம் முழுவதும் புதன்கிழமை தொடங்க உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் 128 மையங்களில் 323 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்-மாணவிகள் தேர்வை எழுத உள்ளனர். சேரன்மகாதேவி கல்வி மாவட்டத்தில் 2,500 மாணவர்கள், 3,383 மாணவிகள், தென்காசி கல்வி மாவட்டத்தில் 3,779 மாணவர்கள், 4,771 மாணவிகள், திருநெல்வேலி கல்வி மாவட்டத்தில் 4,290 மாணவர்கள், 5,647 மாணவிகள், சங்கரன்கோவில் கல்வி மாவட்டத்தில் 2,687 மாணவர்கள், 3,038 மாணவிகள், வள்ளியூரில் 2,840 மாணவர்கள், 3,575 மாணவிகள் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 16,096 மாணவர்கள், 20,414 மாணவிகள் என மொத்தம் 36,510 பேர் தேர்வை எழுத உள்ளனர்.
தேர்வு அறைகளில் தடையற்ற மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துகொடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளதாக கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.