கிணற்றில் மூழ்கி நண்பர்கள் இருவர் சாவு
By DIN | Published On : 22nd March 2019 07:48 AM | Last Updated : 22nd March 2019 07:48 AM | அ+அ அ- |

முக்கூடல் அருகே வியாழக்கிழமை கிணற்றில் மூழ்கி நண்பர்கள் இருவர் உயிரிழந்தனர்.
முக்கூடல் சொக்கலால் பள்ளித் தெருவைச் சேர்ந்த நடராஜன் மகன் பிரசன்னா (45), முக்கூடல் கீழ பெரிய வீதியைச் சேர்ந்த முத்துக்குட்டி மகன் கபால் கண்ணன் (45). நண்பர்களான இருவரும் முக்கூடல் அருகே உள்ள காத்தபுரத்தில் தனியார் தோட்டத்தில் உள்ள சாஸ்தா கோயிலுக்கு பங்குனி உத்திரத்தையொட்டி வழிபடச் சென்றனராம். அங்கு தோட்டத்தில் இருந்த கிணற்று சுற்றுச்சுவரில் உட்கார்ந்திருந்த கண்ணன் கிணற்றில் தவறி விழுந்தாராம். உடனடியாக அருகிலிருந்த பிரசன்னா கிணற்றில் குதித்து கண்ணனைக் காப்பாற்ற முயன்றாராம். ஆனால், இருவரும் நீரில் மூழ்கிவிட்டனராம். தகவலறிந்து சேரன்மகாதேவி தீயணைப்பு நிலைய அலுவலர் (போக்குவரத்து) சுப்பிரமணியன் மற்றும் மீட்பு வீரர்கள், முக்கூடல் காவல் ஆய்வாளர் சங்கரேஸ்வரி, காவல் உதவி ஆய்வாளர் ஞானசெல்வம் மற்றும் போலீஸார் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும், கிணற்றில் தவறி விழுந்த இருவரும் நீரில் மூழ்கி இறந்துவிட்டனர். அவர்களது உடல்களை போலீஸார் மீட்டு திருநெல்வேலி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரசன்னா திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். கபால் கண்ணன் திருமணம் செய்து கொள்ளவில்லை.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...