பெண்ணிடம் நகை பறிப்பு: 4 பேர் கைது
By DIN | Published On : 22nd March 2019 07:47 AM | Last Updated : 22nd March 2019 07:47 AM | அ+அ அ- |

பாளையங்கோட்டை வி.எம்.சத்திரத்தில் பெண்ணிடம் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்ற வழக்கில் தொடர்புடைய 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
திருநெல்வேலி வி.எம்.சத்திரம் கவிதா நகரைச் சேர்ந்த நெல்லையப்பன் மனைவி சுகுமாரி (27). இவர் கடந்த 20ஆம் தேதி தன்னுடைய குழந்தையை பள்ளியில் இருந்து வீட்டுக்கு அழைத்துக்கொண்டு கவிதாநகர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது, மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் அணிந்து வந்த மர்ம நபர்கள் இருவர் சுகுமாரி அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிவிட்டனர். இது குறித்து அவர் பெருமாள்புரம் போலீஸில் புகார் தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக பெருமாள்புரம் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர்.
மேலும், பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் நாகராஜன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இச்சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக கீழநத்தம் கீழுரைச் சேர்ந்த முருகையா மகன் அம்மமுத்து(24), கீழநத்தம் மேலூரைச் சேர்ந்த ராஜா என்பவர் மகன் கார்த்தி (23), கேடிசி நகர் துரைசேட்நகரைச் சேர்ந்த தாமோதரன் மகன் தங்கராஜ்(32), அதே பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் மனைவி பானுப்பிரியா(32) ஆகிய 4 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சுமார் ரூ. 60 ஆயிரம் மதிப்புள்ள தங்கச் சங்கிலி மீட்கப்பட்டது. மேலும் இது தொடர்பாக மேலப்பாளையம் செல்லத்துரை மகன் சூரி என்ற சுரேஷை போலீஸார் தேடி வருகின்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...