புதிய பேருந்து நிலையத்தில் மாதிரி வாக்குச்சாவடி மையம் திறப்பு
By DIN | Published On : 28th March 2019 06:32 AM | Last Updated : 28th March 2019 06:32 AM | அ+அ அ- |

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் மாதிரி வாக்குச்சாவடி மையம் புதன்கிழமை திறக்கப்பட்டது.
ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமை வகித்து, மாதிரி வைக்குச்சாவடி மையத்தைத் திறந்துவைத்துப் பேசியது: தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 18இல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. 100 சதவீத வாக்குப்பதிவு இலக்கை எட்டும் வகையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்பேரில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
திருநெல்வேலி வேய்ந்தான்குளம் பேருந்து நிலையத்துக்கு நாள்தோறும் வந்து செல்லும் பயணிகள், மாணவர்-மாணவிகள், பொதுமக்கள் ஆகியோரிடம் வாக்குப்பதிவின் அவசியம், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைக் கையாள்ளுவது குறித்த செயல் விளக்கத்தை அறிந்து கொள்ளும் வகையில் திருநெல்வேலி மாநகராட்சி சார்பில் மாதிரி வாக்குச்சாவடி மையம் திறக்கப்பட்டுள்ளது. இதுதவிர மின்னனு ஒளித்திரை மூலமாகவும் தேர்தல் நடத்தை விதிமுறைகள், வாக்குப்பதிவு குறித்த செயல்விளக்கம் காட்டப்படுகிறது. ஆகவே, தேர்தலில் அனைவரும் தங்களது ஜனநாயக கடமையான வாக்குகளை தவறாமல் பதிவு செய்ய வேண்டும் என்றார் அவர்.
திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் பி. விஜயலெட்சுமி, திருநெல்வேலி கோட்டாட்சியர் மணீஸ் நாரணவரே, உதவிஆட்சியர் (பயிற்சி) ந.ஒ. சுகபுத்ரா, மாநகராட்சி தலைமைப் பொறியாளர் வி. நாராயணன்நாயர், செயற்பொறியாளர் நாராயணன், உதவி ஆணையர் ரவிக்குமார், வட்டாட்சியர் எஸ்.கே. கனகராஜ், துணை வட்டாட்சியர் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...