காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளருக்கு பிடியாணை
By DIN | Published On : 30th March 2019 11:48 PM | Last Updated : 30th March 2019 11:48 PM | அ+அ அ- |

பெண்ணை அவதூறாக பேசிய வழக்கில், வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகாத காவல் ஆய்வாளர் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளருக்கு பிடியாணை பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.
பணகுடி அருகே உள்ள லெப்பைகுடியிருப்பைச் சேர்ந்த சரவணன் மனைவி சுமதி (30). இவர் கடந்த 2014இல் தனது கணவர் சரவணன் மீதான வழக்கு விசாரணைக்கு பணகுடி காவல் நிலையத்துக்கு சென்றாராம். அப்போது காவல் ஆய்வாளர் ஸ்டீபன் ஜோஸ் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் லைசா ஆகியோர் சுமதியை அவதூறாகப் பேசினராம். இதையடுத்து சுமதி, பணகுடி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். ஆனால் காவல் துறையினர் புகாரை எடுக்கவில்லையாம். இதையடுத்து சுமதி வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிபதி காமராஜ் 3 முறை சம்மன் அனுப்பியும் ஆய்வாளர் ஆஜராகவில்லையாம். இதையடுத்து ஆய்வாளர் ஸ்டீபன் ஜோஸ் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் லைசா ஆகியோருக்கு பிடியாணை பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.
தற்போது ஆய்வாளர் ஸ்டீபன் ஜோன்ஸ் மதுரை மாநகரத்திலும், உதவி ஆய்வாளர் லைசா கன்னியாகுமரி மாவட்டத்திலும் பணியாற்றி வருகின்றனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...