திருநெல்வேலியில் அமமுக வேட்பாளருக்கு பரிசுப் பெட்டி சின்னத்துக்கு தொண்டர்கள் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தனர்.
திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் அமமுக சார்பில் மைக்கேல் ராயப்பன் போட்டியிடுகிறார். தமிழகம் முழுவதும் அமமுக வேட்பாளர்களுக்கு பரிசுப் பெட்டி (கிப்ட் பாக்ஸ்) சின்னத்தை உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இதையடுத்து திருநெல்வேலி நகரம் ஈசான விநாயகர் கோயிலில் இருந்து அமமுக வேட்பாளர் மைக்கேல் ராயப்பன் பிரசாரத்தைத் தொடங்கினார்.
திருநெல்வேலி மாநகர் மாவட்டச் செயலர் கல்லூர் இ.வேலாயுதம் வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு பேசியதாவது: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, பிரசவித்த தாய்மார்களுக்காக அம்மா பரிசு பெட்டகம் திட்டத்தை அறிவித்திருந்தார். அந்த ஒரு நலத்திட்ட உதவியே இன்று எங்களது பரிசுப் பெட்டி சின்னத்துக்கு வாக்குகளை அதிகரிக்கும். ராதாபுரம் பகுதியில் புதிதாக கலைக்கல்லூரி கட்டுவதற்காக தனக்குச் சொந்தமான 25 ஏக்கர் நிலத்தை வேட்பாளர் மைக்கேல் ராயப்பன் வழங்கியுள்ளார். அத்தகைய சமூக சிந்தனையாளரை பரிசுப் பெட்டி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார்.
திருநெல்வேலி நகரம் ரத வீதிகள், பாட்டப்பத்து, பேட்டை, மீனாட்சிபுரம், கைலாசபுரம் பகுதிகளில் பிரசாரம் செய்தனர்.
கைலாசபுரம் பள்ளிவாசலில் தொழுகை முடிந்து வெளியே வந்த இஸ்லாமியர்களிடமும் அமமுக மற்றும் எஸ்டிபிஐ கட்சியினர் வாக்கு சேகரித்தனர். அமமுக மாநில அமைப்புச் செயலர் ஆர்.பி.ஆதித்தன், அவைத் தலைவர் பூ.ஜெகநாதன் என்ற கணேசன், செயற்குழு உறுப்பினர் ராமுவெங்கடாசலம், எஸ்டிபிஐ மாவட்டத் தலைவர் கனி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.